Sunday, 10 December 2017

காஸா நகரில் இருந்து ராக்கெட் வீச்சுக்கு பதிலடி: இஸ்ரேல் வான்தாக்குதல்; 2 பாலஸ்தீனர்கள் பலி


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகராக ஜெருசலேம் திகழ்ந்து வருகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் அங்கு புனித தலங்கள் உள்ளன.

இந்த ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கீகரித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், கடந்த 6-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய எதிர்ப்பு

டிரம்ப் முடிவுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளன.

மலேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தோனேசியா என பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, கண்டன போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.

டிரம்பின் அறிவிப்பால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் அவசரமாக கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தின்போது அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏகோபித்த குரல் எழுப்பின. அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி மட்டும் தனித்து நின்று, டிரம்பின் முடிவை நியாயப்படுத்தி பேசினார்.

டிரம்பின் முடிவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவீடன் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன.

பாலஸ்தீனத்தில் கொந்தளிப்பு

இதற்கிடையே டிரம்ப் அறிவிப்பால் பாலஸ்தீனத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு தங்களுடைய தூதரகத்தை மாற்றும் எவரும் பாலஸ்தீனர்களின் எதிரிகள் என்று ஹமாஸ் மூத்த தலைவர் பாத்தி ஹம்மாத் ஆவேசத்துடன் அறிவித்தார்.

ராக்கெட் வீச்சும், வான்தாக்குதலும்

காஸா நகரில் இருந்து இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினர் நேற்று முன்தினம் 3 ராக்கெட் வீச்சு நடத்தி உள்ளனர். இந்த ராக்கெட்டுகளில் ஒன்று, ஸ்டேராட் நகரில் விழுந்ததாகவும், மற்ற இரண்டு ராக்கெட்டுகளை இஸ்ரேல் தனது அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பின்மூலம் இடைமறித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ராக்கெட் தாக்குலை தொடர்ந்து உடனடியாக இஸ்ரேலும் பதிலடியில் ஈடுபட்டது. ஹமாஸ் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நேற்று அதிகாலையும் தொடர்ந்தது. குறிப்பாக ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுத உற்பத்தி சாலைகள், ஆயுத கிடங்குகள், ராணுவ வளாகம் ஆகியவற்றை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியது.

2 பாலஸ்தீனர்கள் பலி

இந்த தாக்குதல்களில் 2 பாலஸ்தீனர்கள் சிக்கி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த உயிரிழப்பை ஹமாஸ் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இறந்தவர்கள் அப்துல்லா அல் அட்டல், முகமது அல் சப்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களது உடல்கள் பல மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.

டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேல் படையினருடனான மோதலில் ஏற்கனவே 2 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். இப்போது இஸ்ரேல் வான்தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

No comments:

Post a Comment