Friday 8 December 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் போட்டி


சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 5-ந் தேதி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில் நடந்த இந்த பரிசீலனையின் போது, விதிகளை முறையாக பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷால், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் தீபா ஆகியோரின் மனுக்கள் உள்பட 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் மனுக்கள் உள்பட 72 பேரின் மனுக் கள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில், போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். மனுக்களை திரும்பப் பெற மாலை 3 மணி வரை அவகாசம் வழங் கப்பட்டு இருந்தது. நேற்று 13 பேர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் இறுதியாக 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஒரு பெண் சுயேச்சை வேட்பாளரும் அடங்குவார். 59 வேட்பாளர்கள் அடங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டார்.

பின்னர் வேட்பாளர்களுக் கான சின்னங்களையும் அவர் அறிவித்தார். கட்சி வேட்பாளர்களான மதுசூதனனுக்கு (அ.தி.மு.க.) இரட்டை இலையும், மருதுகணேஷுக்கு (தி.மு.க.) உதயசூரியனும், கரு.நாகராஜனுக்கு (பா.ஜனதா) தாமரையும் ஒதுக்கப்பட்டது.

சுயேச்சை வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு இதில் எந்த சின்னமும் கிடைக்கவில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ‘நமது கொங்கு முன்னேற்ற கழகம்’ கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.

டி.டி.வி.தினகரனுக்கு சுயேச்சை சின்னங்களில் ஒன்றான ‘பிரஷர் குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

No comments:

Post a Comment