Friday 31 July 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 31/7/2015

நமதூர் மேலத்தெரு பட்டறை  வீட்டு முஹம்மது கஜ்ஜாலி EX .MC  அவர்களின் தகப்பனார் அப்துல் காதர்  அவர்கள் மௌத்.




அன்னாரின் ஜனாஸா 31/07/2015  வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது .


Thursday 30 July 2015

கலாமும் அறிவியலும்!

அப்துல் கலாம்
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்வுசெய்யப்பட்ட பின், பதவியேற்பு விழாவை ஏற்பாடுசெய்ய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சர் அப்போது சென்னையிலிருந்த கலாமைத் தொடர்புகொண்டு, “கலாம்ஜி நீங்கள் பதவி ஏற்க நல்ல நேரம் தேர்வு செய்துகூறுகிறீர்களா?” என்று கேட்டாராம். அதற்கு கலாம் சொன்னாராம், “பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் விண்மீன் திரளையும் சுற்றுகிறது. ஆகவே ‘நேரம்’ என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அது ஒரு வானவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை.” எப்போதுமே சரி, அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்!
அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ்வழிக் கல்வியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கிய கலாம், எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் வானூர்தி தொழில்நுட்பப் பொறியியல் படிப்பை முடித்தார். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். பின் 1962-ல் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் தும்பா ராக்கெட் தளத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது இஸ்ரோ ‘எஸ்எல்வி -3’ வடிவமைப்பில் ஈடுபட்டுவந்தது. 17 டன் எடை கொண்ட நான்கு அடுக்கு ‘எஸ்எல்வி -3’ 35 கிலோ கொண்ட செயற்கைக்கோளைப் புவியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்த வேண்டும். இந்த ராக்கெட் வடிவமைப்பு, தயாரிப்பு உருவாக்கம் செய்ய 1972-ல் கலாமின் தலைமையில் திட்டக்குழு அமைக்கப்பட்டது. வேறு எந்த நாடும் தொழில்நுட்பத்தைப் பகிராத சூழலிலும் சுயசார்புடன் கடுமையான முயற்சியில் வடிவமைத்தார் கலாம். குறிப்பாக, எடை குறைவான ஆனால் இழை வலுவூட்டிய பிளாஸ்டிக் பொருளைக்கொண்டு ராக்கெட் போன்ற ஏவுவூர்திகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு அவருடையது.
ராக்கெட் வடிவமைப்பில் 44 முக்கியத் துணை அமைப்புகள் இணைந்து இயங்க வேண்டும். இவரது தலைமையில் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக 1980-ல் ஏவப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதுவரை வலிமை பெற்றிருந்த ஐந்து நாடுகளுடன் ஆறாவதாக இந்தியாவும் இணைந்தது. இதே வலிமை கொண்ட ராக்கெட்டைத் தயாரித்து வெற்றிகரமாக ஏவ, அமெரிக்காவுக்குச் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்க, வெறும் ஏழே ஆண்டுகளில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்தது, கலாமின் தலைமையில்!
இஸ்ரோவில் தனது பணி முடிந்ததும் அடுத்த சவாலைச் சந்திக்கத் தயாரானார் கலாம். ராணுவ தேசியப் பாதுகாப்புக்கு ஏவுகணைகள் அவசியமாயின. குறிப்பாக, அமெரிக்கா சில அண்டை நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் வழங்க முன்வந்த அந்தக் காலகட்டத்தில் இது ஒரு பெரும் சவாலாக எழுந்தது.
1982-ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட கலாம், தனது இஸ்ரோ அனுபவத்தை வைத்து ஒலியின் வேகத்தைவிடப் பல மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்னி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரி ஆனார். மேலும், ரஷ்யாவிடம் பேசி அவர்களின் உயர் தொழில்நுட்பத்தைக் கற்றார். சுயமாக ‘பிரமோஸ் குரூஸ்’ ஏவுகணைத் தயாரிப்பிலும் அவர் பங்கு முக்கியமானது. அணுகுண்டுத் தயாரிப்பு, வெடிப்பு முதலியவற்றில் உள்ளபடியே கலாமின் பெரும் பங்கு ராக்கெட் மற்றும் ஏவுகணை போன்ற ஏவுவூர்த்தி வடிவமைப்பில் உள்ளது!
-த.வி. வெங்கடேஸ்வரன்,

Wednesday 29 July 2015

கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஷில்லாங்கில் 27-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்படும் 30-ம் தேதி பொது விடுமுறை அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, 30-ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tuesday 28 July 2015

அப்துல் கலாம் மறைவு

அப்துல் கலாம்| கோப்புப் படம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 83.

ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன், தலைமைச் செயலர் வாஜிரி, ஆகியோர் கலாம் அனுமதிக்கப்பட்ட பெதானி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 

ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 1931-ம் ஆண்டு பிறந்தார் அப்துல் கலாம்.

1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அழைக்கப்படுபவர் அப்துல் கலாம். 

பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார் அப்துல் கலாம். தமிழகத்திலிருந்து 3-வது குடியரசுத் தலைவராவார் அப்துல் கலாம். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்துல் கலாம் மறைவையடுத்து செவ்வாய்) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள் இரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 83. 

அவரது மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய் காலை அவரது உடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு:

அப்துல் கலாம் 1931, அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜைனுலாபுதீன், ஒரு படகுக்குச் சொந்தக்காரர். அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார். 

பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை கொண்டு போடும் வேலையில் இருந்தார். படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது. 

ராமநாதபுரம் ஷ்வார்ட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தார். இங்கு பவுதிக பட்டப்படிப்பை 1954-ம் ஆண்டு நிறைவு செய்தார். 

அதன் பிறகு 1955-ம் ஆண்டு சென்னை வந்த அப்துல் கலாம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் நுழைந்தார். இந்திய விமானப்படையின் போர் விமானி ஆகவேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை, காரணம், 8 இடங்களே கொண்ட பணியின் தகுதிச்சுற்றில் அவர் 9-வது நபராக முடிந்தார்.

பிறகு 1960-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். 

இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா

உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.

Monday 27 July 2015

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை படிக்கும் கிறிஸ்துவர், இஸ்ஸாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ளவர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தல் செய்பவர்கள் ஆக. 15ஆம் தேதி வரையும், கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 9 முதல் எஸ்எஸ்எல்சி வரையுள்ளவர்கள் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் ஆக. 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

Sunday 26 July 2015

மத்திய அரசுத்துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


மத்திய பொதுப்பணித்துறை (Central Public Works Department), அஞ்சல் துறை, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொறியியல் பணி (Military Engineering Service) , மத்திய நீர் ஆணையம் (Central Water Commission)ஆகிய துறைகளில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 06.12.2015 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2015
பதவி: Junior Engineer Group 'B'
காலியிடங்கள் உள்ள துறைகள் விவரம்:
Central Public Work Department
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
Department of Posts
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
Military Engineering Service
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
Central Water Commission
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்களின் எண்ணிக்கை பின்னர் முடிவு செய்யப்படும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் துறையில் பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருவனந்தபுரம்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.
தாள்-I-ல் கொள்குறி வகை கேள்விகளும், தாள் - II-ல் விரிவான விடையளிக்கும் கேள்விகளும் கேட்கப்படும்.
தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் பெறப்படும் செல்லான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது நெட்பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in. http://ssconline2.gov.in என்ற இணையதளத்தங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஆன்லைன் படிவத்தின் பகுதி I-ஐ 07.08.2015 வரையிலும், பகுதி II படிவத்தை 10.08.2015 வரையிலும் நிரப்பலாம்.
மேலும் விண்ணப்பதாரர்களும் எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பி.இ. கலந்தாய்வு 28-இல் நிறைவு


பி.இ. பொது கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது.
பி.இ. பொது கலந்தாய்வு கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை (சனிக்கிழமை நிலவரப்படி) 1,27,776 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 89,141 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டும் 38,168 பேர் பங்கேற்கவில்லை. 467 பேர் விருப்பமான பாடங்கள் கிடைக்காததால் கலந்தாய்வில் இருந்து வெளியேறினர். பொது கலந்தாய்வு நிறைவடைவதற்கு ஓரிரு தினங்கள் உள்ள நிலையில், காலியாக இருக்கும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday 25 July 2015

கலை, வணிகவியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மதிப்பு!


பொறியியல் படிப்பில் சேருவதே பெருமையாகக் கருதப்பட்ட காலம் அது. தன் மகன் பி.இ. சேர்ந்திருக்கிறான் என்பதை பெற்றோர் பெருமையாகக் கூறிக் கொள்வர்.
2008-ஆம் ஆண்டு வரை இந்த நிலை இருந்தது உண்மைதான். ஆனால், 2008-இல் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த போது, அந்நிகழ்வு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தகவல் தொழில்நுட்பப் பணிகளை பிற நாடுகளுக்கு அளிக்கும் பிரதான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த நிலையில் பொருளாதாரப் பின்னடைவைச் சீர்செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அயல் பணிகள் (ஆடஞ) வழங்குவதை அமெரிக்க நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
இது இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், அந்தத் துறையில் வேலைவாய்ப்பையும் வெகுவாக பாதித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது. அதே நேரம் கலை, வணிகவியல் படிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றன என்கின்றனர் பேராசிரியர்கள்.
உதாரணமாக, 2013-14 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் 2,07,141 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு முடிவில் 1,27,838 இடங்களே நிரம்பின; 79,303 இடங்கள் காலியாக இருந்தன.
ஆனால், 2014-15 கல்வியாண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இடம் பெற்றபோதும், 1,02,700 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,02,000 இடங்கள் காலியாக இருந்தன.
மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதால், படிப்புகளை மட்டுமின்றி கல்லூரிகளையே இழுத்து மூடும் நிலைக்கு பொறியியல் கல்வி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இழுத்து மூடப்படும் 17 கல்லூரிகள்
2013-14 ஆம் ஆண்டில் சேர்க்கை குறைந்தவுடன், 80-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற்று இசிஇ, எம்.சி.ஏ., எம்பிஏ, பி.டெக். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை இடங்களை பாதியாகக் குறைத்தன.
இந்த நிலையில், 2014-15 கல்வியாண்டில்
30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட வருவாய் இழப்பைச் சந்தித்தன.
இந்த பாதிப்பு காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த 17 பொறியியல் கல்லூரிகள், கல்லூரியையே முழுமையாக இழுத்து மூட இப்போது (2015-16 கல்வியாண்டில்) விண்ணப்பித்திருப்பதாக ஏஐசிடிஇ தென் மண்டல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறையத் தொடங்கிய நிலையில், கலை, வணிகவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் 2011-ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததால், சென்னைப் பல்கலைக்கழகம் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் முக்கியப் படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் உயர்த்திக் கொள்ள 2011-இல் அனுமதி அளித்தது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகள் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50-லிருந்து 70-ஆக உயர்த்திக் கொண்டன.
ஆனால், அதன் பிறகும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
2014-15 கல்வியாண்டில், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர மொத்தம் 13 ஆயிரம் பேரும், அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
சென்னை, அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மாலை நேரப் பிரிவில் சேர 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இது கடந்த ஆண்டுகளை விட எண்ணிக்கையில் மிக அதிகம். அத்துடன், படிப்புகளைப் பொருத்த வரை வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
தனியார் வங்கி நிறுவனங்கள் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கலை, அறிவியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்யத் தொடங்கிவிட்டன. மேலும், இதன் படிப்புக் காலமும் குறைவு. இவையே கலை, வணிகவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்புக்குக் காரணம் என்கின்றனர் அந்தக் கல்லூரி நிர்வாகிகள்.
இரு மடங்கு விண்ணப்பம்
கலை, அறிவியல் படிப்புகள் மீது ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வமும் இப்போது அதிகரித்துள்ளது.
2015-16 கல்வியாண்டில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடங்க கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 60-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டுகளை விட இரு மடங்கு அதிகம். கடந்த ஆண்டுகளைப் பொருத்த வரை அதிகபட்சம் 30 விண்ணப்பங்களே பெறப்பட்டதாக இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்காலம் எப்படி?
கலை, வணிகவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரிப்பை உணர்ந்த மத்திய அரசு, தரமான, திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இப்போது மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் நம்மோடு பகிர்ந்துகொண்ட விவரம்:
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடும் நிலை இப்போது உருவாகி வருகிறது. அதே நேரம் கலை, அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இதை அறிந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கலை, வணிகவியல் படிப்புகளை முடித்து வெளிவரும் பட்டதாரிகளை திறன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பட்டப் படிப்பு தர நிர்ணயத் திட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.
அதன்படி, படிப்பின் இறுதியாண்டில் மாணவர் பரிசோதிக்கப்பட்டு, முடித்துள்ள பட்டப் படிப்புக்கும், மதிப்பெண்ணுக்கும் மாணவர் எந்த அளவு தகுதியானவர் என்பது குறிப்பிடப்படும்.
இந்த நடைமுறை மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதும், தொழில்நிறுவனங்கள் தேர்வு செய்வதும் எளிதாகிவிடும்.
மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்யவுள்ள தேசிய கல்விக் கொள்கையில் இதுபோல மேலும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற உள்ளன என்றார்.

Friday 24 July 2015

ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும்…


ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது நம்முடைய மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி, உடல் பருமன் அல்லது டைப் 2 நீரழிவு வியாதிக்கு வழிவகுத்துவிடும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.
சுவீடனில் உள்ள உப்ஸால பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்களும் கரோலின்ஸ்கா நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இது. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதால் நம் உடலின் செல்களில் இயங்கும் உயிரியல் கடிகாரம் (பயோலஜிகல் க்ளாக்) குழப்பம் அடைந்துவிடுமாம். ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது உடலுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் தூக்கமின்மையால் உடலின் வளர்சிதை மாற்றங்கள் ஏற்பட்டு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வினை முடித்தார்கள்.
இந்த ஆராய்ச்சியில் மேலும் தீவிர சோதனைக்குப் பிறகு உயிரியல் கடிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் (உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரழிவு நோய்). இதற்குக் ஒரே காரணம் இரவு முழுவதும் தூக்கமின்மை என்கிறார் உப்ஸாலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மற்றும் முதன்மை எழுத்தாளர் ஜோனாதன் செடர்னேஸ்.
15 நபர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவினரை இரண்டு நீண்ட இரவுகள் ஆய்வகத்தில் தங்க வைத்து ஆராய்ச்சியை தொடங்கினார்கள்.
முதல் நாள் அவர்களை உறங்கவிட்டு அடுத்த நாள் முழு இரவும் தூங்காமல் இருக்கச் சொன்னார்கள். அதன் பின் அவர்களின் திசுக்களை எடுத்து சோதனைக்கு உட்படுத்தியதில் அவர்களின் மரபணுக்களில் கண்கூடாக சில வளர்சிதை மாற்றங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது.
இரவுப் பணி செய்பவர்கள், இரவு முழுவதும் தூக்கம் வராமல் பகலில் தூங்குபவர்களுக்கு நிச்சயம் டிஎன்ஏ பிரச்னைகள் ஏற்படும். இது நாளடைவில் வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என்று முடிவை பதிவு செய்து அதனுடன் சேர்த்து மருத்துவ ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது இந்த ஆய்வுக் குழு.

Thursday 23 July 2015

உலகின் மிகப் பழைய குரான்: பிரிட்டன் பல்கலை.யில் கண்டெடுப்பு


பிரிட்டனின் பர்மிங்ஹம் பல்கலைகழத்தில் உள்ள குரானின் பக்கங்கள், 1,370 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 ஏறத்தாழ முகமது நபி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டதாகக் கூறப்படும், தோல் காகிதத்தாலான அவை, உலகின் மிகப் பழைய குரான்களில் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் "ரேடியோ கார்பன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
 அந்தத் தோல் காகிகங்களிலுள்ள குரான் வசனங்கள் கிபி. 568 முதல் 645-ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 எனவே, கி.பி. 570 முதல் 632 வரை வாழ்ந்ததாகக் கருதப்படும் முகமது முகமது நபிகளின் காலத்தில் அந்தக் குரான் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.
 இந்த குரான் பக்கங்கள், பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் 1,600-ஆவது ஆண்டைச் சேர்ந்த வேறு குரான் பக்கங்களுடன் இதுவரை தவறுதலாக இணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்செயலாக இந்தப் பக்கங்களை நவீன ஆய்வுக்கு உள்படுத்தியபோது அது உலகின் மிகப் பழைய குரான் பக்கங்களில் ஒன்று என்பது தெரிய வந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday 22 July 2015

ஆதார் திட்டத்தை கைவிடுவது இயலாது: மத்திய அரசு


பல்வேறு நலத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் திட்டத்தை செயல்படுத்த பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டதை தற்போது கைவிடுவது இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
 இந்தத் தகவலை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்விடம் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவித்ததாவது:
 பெரும்பாலான மக்கள் ஆதார் திட்டத்தில் இணைந்து, தனி அடையாள எண்ணைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், இத்திட்டத்தைக் கைவிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
 இதுதொடர்பான கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனால், நாட்டின் ஆட்சிமுறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
 தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் அந்தரங்கம், கண்காணிப்பு ஆகியவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் அடங்கியுள்ளன' என்றார்.
 அதைத் தொடர்ந்து, ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் பல்வேறு மாநில அரசுகளின் உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, புதன்கிழமை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 முன்னதாக, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட் உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாதது தடையாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. 
 

Tuesday 21 July 2015

வெளிநாட்டு சொத்து விவரங்களை செப்.30-க்குள் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வருமான வரித் துறை எச்சரிக்கை


வெளிநாட்டில் சட்டவிரோதமாக இருக்கும் சொத்துகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்காதோர் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து செய்தித்தாள்களில் வருமான வரித் துறை திங்கள்கிழமை வெளியிட்ட விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு இருக்கும் சொத்துகள் குறித்த தகவல், வருமான வரித் துறையிடம் இருக்கிறது. வெளிநாடுகளில் சொத்துகளை வைத்திருப்போர், அதுகுறித்த தகவலை தெரிவிப்பதற்கு கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 மேற்குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தகவல் தெரிவிக்கவில்லையெனில், அவர்களுக்கு இருக்கும் வெளிநாட்டு சொத்துகளின் மதிப்பின் அடிப்படையில் வரி, அபராதம் ஆகியவை 120 சதவீதம் விதிக்கப்படும். அத்துடன் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
 வெளிநாட்டு சொத்துகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு, வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்ள வருமான வரி தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில், தில்லியில் வருமான வரித் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அதுகுறித்த தகவலை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.
 இதுகுறித்து, வருமான வரித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அந்த விளம்பங்களில் கூறப்பட்டுள்ளது.
 கருப்பு பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டம், நாடு முழுவதும் கடந்த 1ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி வைத்திருப்போருக்கு அதுகுறித்த தகவலை தெரிவிப்பதற்கு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை 90 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 இதை பயன்படுத்தி, வெளிநாட்டு சொத்துகள் குறித்த தகவலை வெளியிடுவோருக்கு 30 சதவீத வரியும், அதற்கு இணையாக அபராதமும் விதிக்கப்படும். அந்த வரி, அபராதத்தை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேசமயம், மேற்குறிப்பிட்ட கெடுவுக்குள் தகவலை வெளியிடாதோருக்கு 90 சதவீத வரியும், 30 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Monday 20 July 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 20/07/2015

  

நமதூர் மேலத்தெரு பூதமங்கல தார் வீட்டு  KEIA தலைவர் சுபகத்துல்லாஹ் அவர்களின் அண்ணனும் முஹம்மது ரியாஸ் அவர்களின் தகப்பனாருமான அன்வர்தீன் அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாஸா 20/07/2015 திங்கள் இரவு 9 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது .

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த நடவடிக்கை


திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நாகப்பட்டினம் எம்.பி. கே. கோபால்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை கட்டுமானப் பணி மற்றும் சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியது:
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டு முதல் கட்டமாக சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பெரிய பாலம் அமைக்கும் பணி தொடங்கும். மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் தஞ்சாவூர் வழியாக செல்கிறது. இதனால் இரண்டு ரயில் நிலையங்களில் என்ஜின் மாற்ற வேண்டியிருப்பதால் நேரம் மற்றும் செலவும் அதிகமாகிறது. எனவே அறிவித்தபடி திருவாரூர் வழியாக மன்னார்குடி - சென்னை ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை விரைவில் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
காலை 8 மணிக்கு பிறகு திருவாரூர் ரயில் நிலையம் வழியாக பிற்பகல் 2 மணி வரை ரயில்கள் இல்லை. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது துணை முதன்மை பொறியாளர் திருமலை உடனிருந்தார்.

Sunday 19 July 2015

நோன்பு பெருநாள் : திருவாரூர் மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை





திருவாரூர் மாவட்ட பகுதியில் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

திருவாரூர்

ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று திருவாரூர் கொடிக்கால்பாளையம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் அப்துல் நாசர் தொழுகையை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் உறவின்முறை ஜமாத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதேபோல திருவாரூர் விஜயபுரம் பள்ளிவாசல், அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி குட்டியார் ஜும்மா பள்ளிவாசல், புதுத்தெரு பள்ளிவாசல், மெக்கா பள்ளிவாசல், ஆசாத்நகர் முகைதீன்பள்ளிவாசல், தர்கா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், அத்திக்கடை, காரியமங்கலம், நாகங்குடி, அரிச்சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை கூறி இனிப்பு வழங்கினர். அப்போது சிறுவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். 

புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்




திருவாரூரில் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பஸ் போக்குவரத்து

திருவாரூர்¢ ஹவுசிங் யூனிட் - கொடிக்கால்பாளையம் இடையே புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நேற்று பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், போக்குவரத்து கழக பொது மேலாளர் ஸ்டீபன், துணை மேலாளர் ராஜா, கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி பாதை

ஏழை-எளிய மக்களின் நலன் காக்கும் வகையிலான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் அரசு திட்டங்களால் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் நகரசபை தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள், பன்னீர்செல்வம், முருகானந்தம், முத்துமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை மேலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார். 

Saturday 18 July 2015

பெற்றோர், சகோதரியை அடுத்தடுத்து இழந்து தவிப்பு: மூளை வளர்ச்சி குன்றிய அண்ணனை பராமரிக்கும் மாற்றுத்திறனாளி தங்கை - அரசின் உதவிக்காக காத்திருப்பு

அண்ணன் சுல்தான் அலாவுதீனுடன் கதீஜா பானு. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

மனவளர்ச்சி குன்றிய அண்ணனை தாயாக இருந்து கவனித்து வருகிறார் மாற்றுத்திறனாளியான அவரது தங்கை. பெற்றோரையும் உடன்பிறந்த சகோதரியையும் இழந்து தவிக்கும் இவர்கள் அரசின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
மதுரை கரும்பாலை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி மைதீன் பாத்திமா. இவர்களுக்கு செய்யது அலி பாத்திமா, சுல்தான் அலாவுதீன் (36), கதிஜா பானு (30) என 3 பிள்ளைகள். மூவருமே மாற்றுத்திறனாளிகள். உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென முகமது இஸ்மாயில் இறந்தார். கணவரின் இழப்பால் தவித்து வந்த மைதீன் பாத்திமா அடுத்த 2 ஆண்டுகளில் காலமானார்.
தனித்து விடப்பட்ட 3 மாற்றுத்திறனாளி குழந்தைகளை யும் அவர்களின் தாய்மாமா ஷேக் மதார் அரவணைத்தார். இந்நிலையில் தாயாக இருந்து தம்பி, தங்கையை கவனித்து வந்த மூத்த குழந்தை அலி பாத்திமாவும் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது அந்த குடும்பத்தில் மிச்சமிருப்பது மூளை வளர்ச்சி குன்றிய சுல்தான் அலாவுதீனும், மாற்றுத்திறனாளி தங்கை கதிஜா பானுவும்தான். தாய்மாமா ஷேக் மதார் டிரைசைக்கிள் தொழிலாளி. வருகின்ற சொற்ப வருமானத்தில் முழுமையாக அவர்களை பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பெற்றோர் இறந்த பிறகு, மூத்த குழந்தையான செய்யது அலி பாத்திமாதான் மற்ற இருவரையும் தாயைப்போல பார்த்து வந்தார். ஓராண்டுக்குமுன் அவரும் இறந்துவிட்டார்.
மற்ற இரு குழந்தைகளை யாவது நன்றாக வளர்க்க வேண்டும் என்று ஊனமுற்றோர் உதவித்தொகை கேட்டு விண்ணப் பித்தோம். சுல்தான் அலாவுதீனுக்கு மட்டும் கிடைக்கிறது. கதிஜா பானு வீட்டு வேலைக்கு செல்கிறார். பின்னர் வந்து குடும்ப வேலைகளையும் கவனிக்கிறார். அவர் மாற்றுத்திறனாளி ஆனாலும் அண்ணனை தாயைப் போல பார்த்துக் கொள்கிறார்.
போதுமான வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கதிஜா பானுவுக்கும் ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும், 30 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் உள்ள அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண் டும் என்றும், ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் இல்லை’ என்கிறார் வேதனை பொங்க.
இன்று ரம்ஜான் பண்டிகை. புத்தாடை அணிந்து மகிழ்ச்சி பொங்க கொண்டாட வேண்டிய இந்த நாள் இவர்களுக்கு மட்டும் மற்றொரு சாதாரண நாளாகவே கடந்து செல்லும். நல்ல உடை உடுத்தியே பல ஆண்டுகள் ஆகின்றன.
இருப்பினும் ‘கருணை உள்ளவர்கள் மூலம் அல்லா எங்களின் குடும்பத்துக்கு உதவுவார்’ என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஷேக் மதார். அவரது செல் நம்பர்: 93603 89421.

Friday 17 July 2015

நோன்பு பெருநாள் தொழுகை அறிவிப்பு

                                           


                                           



 நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை  இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436 ஷவ்வால் பிறை 1  (18/7/2015) சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது .

இதைபோல நமதூர் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் காலை மணி 9க்கு நடைபெறும் .

வழக்கம் போல பெண்களுக்கு  இடம் வசதி செய்யப்பட்டு உள்ளது .முன்கூட்டியே வந்து ஒத்துழைக்க வேண்டுகிறோம் .



வெளிநாடுகளில் பெருநாள் கொண்டாட்டம்

17/07/2015 வெள்ளிக்கிழமை அன்று மலேசியா , சிங்கப்பூர், சவுதி அராபியா ,  UAE , குவைத் உள்ளிட்ட நாடுகளில் நோன்பு பெருநாள் வழக்கமான உற்சாகமாக  கொண்டாட்ட பட்டு வருகிறது . 

Thursday 16 July 2015

H1436 விடைபெறும் ரமலான்

   ஹிஜ்ரி 1436 ம் ஆண்டின் ரமலான் மாதம் நிறைவு பகுதிக்கு வந்து விட்டது .

இறைவன் நாடினால் அடுத்த   ஆண்டு நம் அனைவருக்கும் புனித ரமலானை அடையும் பாக்கியத்தை கிடைக்க பெறுவோம்.ஆமீன்  .பள்ளிவாசலில் நோன்பு திறப்பு ,தராவிஹ் தொழுகை ,கியாமுல் லைல் தொழுகை , ராத்திப்பு மஜிலிஸ் ,திருகுரான் மஜிலிஸ் என சிறப்பு மிக்க நிகழ்வுகள்   இருந்து வந்தன .


நமது     முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் கொடிநகர் கத்தார் வாசிகள் குழு மற்றும் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம் இளைஞர்சங்கம்  சார்பாக சஹர் சாப்பாடு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. 

அதுபோல MABHS சங்கத்தில்  புருதா  மஜீலிஸ்  நிறைவு  நிகழ்ச்சி  நடைபெற  உள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் வேலைவாய்ப்பகம்

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.inஎன்ற முகவரிக்குச் செல்லலாம்.

பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு


பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு புதன்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதன் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி பெட்ரோல் விலை 31 காசுகளும், டீசல் விலை 71 காசுகளும் குறைக்கப்பட்டது.
இதனிடையே, தில்லி மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு (வாட்) வரியை உயர்த்தியுள்ளது. இதனால், தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 78 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 83 காசுகளும் அதிகரித்துள்ளது

Wednesday 15 July 2015

சிறுபான்மையினர் விவரங்களை கோருகிறது மத்திய அரசு


மத்திய அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் விவரங்களை அனைத்து துறைகளிடமும் பணியாளர் நலத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. சிறுபான்மையினர் நலன் தொடர்பான பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
 இதுகுறித்து மத்தியப் பணியாளர் நலத் துறை அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சிறுபான்மை சமூக மக்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, குறிப்பிட்ட துறையில் சிறுபான்மையின மக்கள் பணியமர்த்தப்படும் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைந்து காணப்பட்டால் அதற்கான காரணத்தையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.
 இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய 5 பிரிவுகளுடன் ஜைன (சமண) சமூகத்தினரையும் இணைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tuesday 14 July 2015

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு கலெக்டர் மதிவாணன் தகவல்


பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதிவாணன் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி சான்றிதழை பெறும் பிளஸ்-2 மாணவர்களுக்காக அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பிளஸ்-2 மாணவர்கள் சான்றிதழ் பெற வரும்போது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை பதிவு செய்ததற்கான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வர வேண்டும்.

அடையாள அட்டை

இணைய தளம் மூலமாக மாணவர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் 15 நாட்களுக்கு இப்பணி பள்ளிகளில் நடைபெறும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Monday 13 July 2015

நமதூர் மெளத் அறிவிப்பு 13/07/2015


நமதூர் நடுத்தெரு குள்ள கத்திரிக்காய் வீட்டு ஜமால் முஹம்மது அவர்களின் தாயாரும் மர்ஹூம் S.E.P முஹம்மது ஜெக்கரியா அவர்களின் மனைவி அவர்கள்  சூஃபி நகர் வடக்குத்தெருவில் மௌத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன


லைலத்துல் கதர் இரவின் சிறப்புகள்!

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

“இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத
 தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
1. சிறப்புகள்:

அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு
ரமதான் மாதத்தில் ஒரு இரவு
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு

2. அது எந்த இரவு?:

ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமதானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

'லைலத்துல் கத்ர் இரவை ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

3. லைலத்துல் கத்ரை தேடுவது:

'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

4. லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

'ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

5. (இஃதிகாஃப்) பள்ளியில் தங்குதல்:

'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

6. இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

7. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமதானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!

திருவாரூர் ஜூலை 14 மின் தடை


திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி ஆகியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி. சந்திரசேகரன்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், அடியக்கமங்கலம், ஈபி காலனி, சிதம்பரம் நகர், பிலாவடிமூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்படி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம், தட்டாத்திமூலை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, கொரடாச்சேரி, கண்கொடுத்தவணிதம், கமுகக்குடி, செல்லூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


குரூப் 1 தேர்வுக்கு  விண்ணப்பிக்கலாம், இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடவுள்ளது.
துணை ஆட்சியர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வாணைய இணையதளத்திலேயே www.tnpsc.gov.in விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ம் தேதி கடைசி நாளாகும்.
குரூப் 1 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 3 அல்லது 4 ஆம் ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும். துணை ஆட்சியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியும். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆக முடியும்.
முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்க உள்ளது என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Sunday 12 July 2015

கட்டாய தலைக்கவச சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை:உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி



கட்டாய தலைக் கவச சட்டத்தில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் கூறினார்.
திருநெல்வேலி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர்கள் சங்கரநாராயணன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோரது படத் திறப்பு விழா, பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், மூத்த வழக்குரைஞர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் பேசியது:
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சங்கரநாராயணன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் தங்களது கல்வித் திறமையால் உயர்ந்த நிலைக்கு வந்து நீதித்துறைக்கே பெருமை சேர்த்துள்ளனர்.
நீதிமன்றங்களில் எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. சட்டத்தின் வழியில் சாதாரண மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் பணியில் உள்ள வழக்குரைஞர்கள், அதற்கு முரணாக எப்படி செயல்பட முடியும்? எனவே, நீதிமன்ற புறக்கணிப்பை வழக்குரைஞர்கள் கைவிட வேண்டும். திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞர்கள் இதற்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
மூத்த வழக்குரைஞர்களின் வாதத் திறமைகளையும், முன்னோடி வழக்குகளின் வாதங்கள், தீர்ப்புகளையும் அறிந்து அவற்றை ஒவ்வொரு வழக்குரைஞரும் தங்களது வழக்கில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 47 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 20 ஆண்டுகளை கடந்து 50 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டாய தலைக் கவச சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில், யாருக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் என யாராக இருந்தாலும் இந்தச் சட்டம் பொதுவானது. இந்தச் சட்டம் குறித்து யாருக்கேனும் உடன்பாடு இல்லையெனில் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றார் அவர்.
இந்த விழாவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராமநாதன், தங்கராஜ், திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நஷீர் அகமது, வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற நடுவர்கள், சார்பு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.