நாட்டுக் கோழி இறைச்சி மருத்துவக் குணம் நிறைந்தவை என்றார் திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நபார்டு வங்கி திருவாரூர் இணைந்து நாமக்கல் 1 ரக நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை ஆட்சியர் எம். மதிவாணன் தொடங்கிவைத்து மேலும் பேசியது:
நாட்டுக்கோழியின் இறைச்சி உணவாக மட்டுமல்லாமல், பல வியாதிகளையும் குணப்படுத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. நாட்டுக்கோழி சூப் மற்றும் நாட்டுக்கோழி குழம்பை மிளகுடன் சேர்த்து சாப்பிடும்போது நாள்பட்ட சளி, இருமல் மற்றும் உடல் சோர்வு நீங்குகிறது.
காசநோய் மற்றும் இளைப்பு வியாதிக்கும் நாட்டுக்கோழியின் சூப், குழம்பு மற்றும் ரசம் மிக அருமருந்தாக உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற அசைவ உணவாக நாட்டுக்கோழி விளங்குகிறது என்றார்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெ. பாஸ்கரன் பேசியது:
நாமக்கல் 1 ரக நாட்டுக் கோழிகள் முறையான பராமரிப்பில் 12 வாரங்களில் ஒன்று முதல் ஒன்றேகால் கிலோ எடையை அடைகிறது.
நான்கு வகையான கோழிகளின் மரபணு கலப்பு இருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி, முட்டையிடும் திறன் மற்றும் நாட்டு கோழியின் சுவையும் தன்மையும் மாறாமல் இருக்கிறது. நமது கோழிகள் அதிகபட்சம் 150-200 முட்டைகள் இடும், ஆனால் நாமக்கல் 1 ரக கோழிகள் அதிகபட்சம் 300 முட்டை வரை இடும். எனவே குறைந்தபட்சம் பத்து நாமக்கல் 1 ரக நாட்டுக்கோழி வளர்த்தாலே ஆண்டு முழுவதும் முட்டை விற்பதன் மூலம் வருமானம் பெறலாம் என்றார்.
திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், நபார்டு, மாவட்ட வளர்ச்சி மேலாளர் நா. ரவிசங்கர், கால்நடை உதவி மருத்துவர் க. மகேந்திரன், உதவி வேளாண் இயக்குநர் ந. இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக, நாளும் வளம் கொழிக்க நாமக்கல் கோழி வளர்ப்பு என்ற கையேட்டை ஆட்சியர் வெளியிட, திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் இறுதியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்று அளிக்கப்பட்டது. இந்த மூன்று நாள் பயிற்சியை மருத்துவர் செ. சரவணன், (கால்நடை மருத்துவ அறிவியல்) ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment