Tuesday 21 July 2015

வெளிநாட்டு சொத்து விவரங்களை செப்.30-க்குள் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வருமான வரித் துறை எச்சரிக்கை


வெளிநாட்டில் சட்டவிரோதமாக இருக்கும் சொத்துகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவான செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்காதோர் மீது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
 இதுகுறித்து செய்தித்தாள்களில் வருமான வரித் துறை திங்கள்கிழமை வெளியிட்ட விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு இருக்கும் சொத்துகள் குறித்த தகவல், வருமான வரித் துறையிடம் இருக்கிறது. வெளிநாடுகளில் சொத்துகளை வைத்திருப்போர், அதுகுறித்த தகவலை தெரிவிப்பதற்கு கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 மேற்குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தகவல் தெரிவிக்கவில்லையெனில், அவர்களுக்கு இருக்கும் வெளிநாட்டு சொத்துகளின் மதிப்பின் அடிப்படையில் வரி, அபராதம் ஆகியவை 120 சதவீதம் விதிக்கப்படும். அத்துடன் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
 வெளிநாட்டு சொத்துகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு, வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்ள வருமான வரி தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில், தில்லியில் வருமான வரித் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அதுகுறித்த தகவலை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம்.
 இதுகுறித்து, வருமான வரித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அந்த விளம்பங்களில் கூறப்பட்டுள்ளது.
 கருப்பு பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டம், நாடு முழுவதும் கடந்த 1ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி வைத்திருப்போருக்கு அதுகுறித்த தகவலை தெரிவிப்பதற்கு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை 90 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 இதை பயன்படுத்தி, வெளிநாட்டு சொத்துகள் குறித்த தகவலை வெளியிடுவோருக்கு 30 சதவீத வரியும், அதற்கு இணையாக அபராதமும் விதிக்கப்படும். அந்த வரி, அபராதத்தை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதேசமயம், மேற்குறிப்பிட்ட கெடுவுக்குள் தகவலை வெளியிடாதோருக்கு 90 சதவீத வரியும், 30 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment