Thursday 30 July 2015

கலாமும் அறிவியலும்!

அப்துல் கலாம்
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்வுசெய்யப்பட்ட பின், பதவியேற்பு விழாவை ஏற்பாடுசெய்ய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சர் அப்போது சென்னையிலிருந்த கலாமைத் தொடர்புகொண்டு, “கலாம்ஜி நீங்கள் பதவி ஏற்க நல்ல நேரம் தேர்வு செய்துகூறுகிறீர்களா?” என்று கேட்டாராம். அதற்கு கலாம் சொன்னாராம், “பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் விண்மீன் திரளையும் சுற்றுகிறது. ஆகவே ‘நேரம்’ என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அது ஒரு வானவியல் நிகழ்ச்சியே தவிர, ஜோதிட நிகழ்ச்சி இல்லை.” எப்போதுமே சரி, அவர் ஒரு விஞ்ஞானியாகவே இருந்தார்!
அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ்வழிக் கல்வியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கிய கலாம், எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் வானூர்தி தொழில்நுட்பப் பொறியியல் படிப்பை முடித்தார். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். பின் 1962-ல் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் தும்பா ராக்கெட் தளத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது இஸ்ரோ ‘எஸ்எல்வி -3’ வடிவமைப்பில் ஈடுபட்டுவந்தது. 17 டன் எடை கொண்ட நான்கு அடுக்கு ‘எஸ்எல்வி -3’ 35 கிலோ கொண்ட செயற்கைக்கோளைப் புவியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்த வேண்டும். இந்த ராக்கெட் வடிவமைப்பு, தயாரிப்பு உருவாக்கம் செய்ய 1972-ல் கலாமின் தலைமையில் திட்டக்குழு அமைக்கப்பட்டது. வேறு எந்த நாடும் தொழில்நுட்பத்தைப் பகிராத சூழலிலும் சுயசார்புடன் கடுமையான முயற்சியில் வடிவமைத்தார் கலாம். குறிப்பாக, எடை குறைவான ஆனால் இழை வலுவூட்டிய பிளாஸ்டிக் பொருளைக்கொண்டு ராக்கெட் போன்ற ஏவுவூர்திகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு அவருடையது.
ராக்கெட் வடிவமைப்பில் 44 முக்கியத் துணை அமைப்புகள் இணைந்து இயங்க வேண்டும். இவரது தலைமையில் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக 1980-ல் ஏவப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதுவரை வலிமை பெற்றிருந்த ஐந்து நாடுகளுடன் ஆறாவதாக இந்தியாவும் இணைந்தது. இதே வலிமை கொண்ட ராக்கெட்டைத் தயாரித்து வெற்றிகரமாக ஏவ, அமெரிக்காவுக்குச் சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்க, வெறும் ஏழே ஆண்டுகளில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்தது, கலாமின் தலைமையில்!
இஸ்ரோவில் தனது பணி முடிந்ததும் அடுத்த சவாலைச் சந்திக்கத் தயாரானார் கலாம். ராணுவ தேசியப் பாதுகாப்புக்கு ஏவுகணைகள் அவசியமாயின. குறிப்பாக, அமெரிக்கா சில அண்டை நாடுகளுக்கு ராணுவத் தளவாடங்கள் வழங்க முன்வந்த அந்தக் காலகட்டத்தில் இது ஒரு பெரும் சவாலாக எழுந்தது.
1982-ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட கலாம், தனது இஸ்ரோ அனுபவத்தை வைத்து ஒலியின் வேகத்தைவிடப் பல மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்னி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரி ஆனார். மேலும், ரஷ்யாவிடம் பேசி அவர்களின் உயர் தொழில்நுட்பத்தைக் கற்றார். சுயமாக ‘பிரமோஸ் குரூஸ்’ ஏவுகணைத் தயாரிப்பிலும் அவர் பங்கு முக்கியமானது. அணுகுண்டுத் தயாரிப்பு, வெடிப்பு முதலியவற்றில் உள்ளபடியே கலாமின் பெரும் பங்கு ராக்கெட் மற்றும் ஏவுகணை போன்ற ஏவுவூர்த்தி வடிவமைப்பில் உள்ளது!
-த.வி. வெங்கடேஸ்வரன்,

No comments:

Post a Comment