Friday, 24 July 2015

ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும்…


ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது நம்முடைய மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி, உடல் பருமன் அல்லது டைப் 2 நீரழிவு வியாதிக்கு வழிவகுத்துவிடும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.
சுவீடனில் உள்ள உப்ஸால பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்களும் கரோலின்ஸ்கா நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இது. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதால் நம் உடலின் செல்களில் இயங்கும் உயிரியல் கடிகாரம் (பயோலஜிகல் க்ளாக்) குழப்பம் அடைந்துவிடுமாம். ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது உடலுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் தூக்கமின்மையால் உடலின் வளர்சிதை மாற்றங்கள் ஏற்பட்டு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வினை முடித்தார்கள்.
இந்த ஆராய்ச்சியில் மேலும் தீவிர சோதனைக்குப் பிறகு உயிரியல் கடிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் (உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரழிவு நோய்). இதற்குக் ஒரே காரணம் இரவு முழுவதும் தூக்கமின்மை என்கிறார் உப்ஸாலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மற்றும் முதன்மை எழுத்தாளர் ஜோனாதன் செடர்னேஸ்.
15 நபர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவினரை இரண்டு நீண்ட இரவுகள் ஆய்வகத்தில் தங்க வைத்து ஆராய்ச்சியை தொடங்கினார்கள்.
முதல் நாள் அவர்களை உறங்கவிட்டு அடுத்த நாள் முழு இரவும் தூங்காமல் இருக்கச் சொன்னார்கள். அதன் பின் அவர்களின் திசுக்களை எடுத்து சோதனைக்கு உட்படுத்தியதில் அவர்களின் மரபணுக்களில் கண்கூடாக சில வளர்சிதை மாற்றங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது.
இரவுப் பணி செய்பவர்கள், இரவு முழுவதும் தூக்கம் வராமல் பகலில் தூங்குபவர்களுக்கு நிச்சயம் டிஎன்ஏ பிரச்னைகள் ஏற்படும். இது நாளடைவில் வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என்று முடிவை பதிவு செய்து அதனுடன் சேர்த்து மருத்துவ ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது இந்த ஆய்வுக் குழு.

No comments:

Post a Comment