Wednesday 22 July 2015

ஆதார் திட்டத்தை கைவிடுவது இயலாது: மத்திய அரசு


பல்வேறு நலத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் திட்டத்தை செயல்படுத்த பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டதை தற்போது கைவிடுவது இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
 இந்தத் தகவலை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்விடம் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
 அவர் மேலும் தெரிவித்ததாவது:
 பெரும்பாலான மக்கள் ஆதார் திட்டத்தில் இணைந்து, தனி அடையாள எண்ணைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், இத்திட்டத்தைக் கைவிடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
 இதுதொடர்பான கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனால், நாட்டின் ஆட்சிமுறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
 தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் அந்தரங்கம், கண்காணிப்பு ஆகியவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் அடங்கியுள்ளன' என்றார்.
 அதைத் தொடர்ந்து, ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் பல்வேறு மாநில அரசுகளின் உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, புதன்கிழமை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 முன்னதாக, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட் உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாதது தடையாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. 
 

No comments:

Post a Comment