Sunday 12 July 2015

கட்டாய தலைக்கவச சட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை:உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி



கட்டாய தலைக் கவச சட்டத்தில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் கூறினார்.
திருநெல்வேலி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர்கள் சங்கரநாராயணன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோரது படத் திறப்பு விழா, பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், மூத்த வழக்குரைஞர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் பேசியது:
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சங்கரநாராயணன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் தங்களது கல்வித் திறமையால் உயர்ந்த நிலைக்கு வந்து நீதித்துறைக்கே பெருமை சேர்த்துள்ளனர்.
நீதிமன்றங்களில் எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. சட்டத்தின் வழியில் சாதாரண மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் பணியில் உள்ள வழக்குரைஞர்கள், அதற்கு முரணாக எப்படி செயல்பட முடியும்? எனவே, நீதிமன்ற புறக்கணிப்பை வழக்குரைஞர்கள் கைவிட வேண்டும். திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞர்கள் இதற்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
மூத்த வழக்குரைஞர்களின் வாதத் திறமைகளையும், முன்னோடி வழக்குகளின் வாதங்கள், தீர்ப்புகளையும் அறிந்து அவற்றை ஒவ்வொரு வழக்குரைஞரும் தங்களது வழக்கில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 47 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 20 ஆண்டுகளை கடந்து 50 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டாய தலைக் கவச சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதில், யாருக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் என யாராக இருந்தாலும் இந்தச் சட்டம் பொதுவானது. இந்தச் சட்டம் குறித்து யாருக்கேனும் உடன்பாடு இல்லையெனில் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றார் அவர்.
இந்த விழாவில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராமநாதன், தங்கராஜ், திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி நஷீர் அகமது, வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற நடுவர்கள், சார்பு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment