Wednesday 30 August 2017

அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்து இருப்பதில் வாகன ஓட்டிகளுக்கு என்ன சிரமம்?

வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1–ந் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரிடம் நேற்று டிராபிக் ராமசாமி முறையிட்டார்.
அப்போது, ‘டிரைவர்களாக வேலை செய்பவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை, வாகன உரிமையாளரிடம் கொடுத்துவிடுவது வழக்கம். எனவே, அவர்களால் அசல் உரிமத்தை வைத்திருக்க இயலாது. அசல் ஓட்டுனர் உரிமம் திடீரென தொலைந்துவிட்டால், புதிதாக வாங்குவதற்கும் பல நடைமுறைகள் உள்ளதால் உடனடியாக பெறமுடியாது. அதுவரை சம்பந்தப்பட்ட நபர் வாகனங்களை ஓட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று டிராபிக் ராமசாமி கூறினார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘இந்த விவகாரத்தில் தற்போது எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வாகனத்தை ஓட்டும்போது வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பதில் என்ன சிரமம் உள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இதேபோல கே.அஸ்வின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் அசல் ஓட்டுனர் உரிமத்தைத்தான் வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், அந்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் புது உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. எனவே அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tuesday 29 August 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 29/08/2017

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நமதூரில் அபுல்ஹசன் (ஜெஹபர் நாச்சியா வின் கணவரும் பரக்கத்தின் தகப்பனார்) இன்று மௌத். இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வந்துள்ளது

Sunday 27 August 2017

பொது சிவில் சட்டம் பற்றிய அறிக்கை அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படும் - சட்ட ஆணையம்

இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனியே சட்டங்கள் இருக்கும்போது பொது சிவில் சட்டம் சாத்தியமா என்பது குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட ஆணையத்திடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

உச்ச நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது ஆணையம் தனது பணியில் மெதுவாக செயல்பட்டு வந்தது. முத்தலாக் விஷயத்தில் கொடுக்கப்படும் தீர்ப்பு தங்களின் பணிக்கு உதவும் என்பதால் இக்குழு காத்திருந்தது. தனிநபர் சட்டங்களின் மீது உச்சநீதிமன்ற எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது முத்தலாக்கை நீக்குவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று கருதியுள்ளது ஆணையம்.

இந்த ஆணையத்திற்கு இதுவரை தனிநபர் சட்டங்கள் குறித்து 45,000 எழுத்து பூர்வமான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் மீது அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்கப்போவதாக அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

Friday 25 August 2017

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ‘நோட்டீஸ்’ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்குமாறு கோரி தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்.

இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூந்தமல்லி ஏழுமலை, பெரம்பூர் வெற்றிவேல், திருப்போரூர் கோதண்டபாணி, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், அரூர் முருகன், நிலக்கோட்டை தங்கதுரை, அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் ரெங்கசாமி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, ஆண்டிப்பட்டி தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் கதிர்காமு, கம்பம் ஜக்கையன், சாத்தூர் சுப்பிரமணியன், பரமக்குடி முத்தையா, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, ஓட்டப்பிடாரம் சுந்தரராஜ் ஆகிய 19 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

14.2.2017 அன்று அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமித்து எடுத்த முடிவுக்கு எதிராக எந்தவித தீர்மானமோ, முடிவோ எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த 19 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கட்சி தலைமைக்கு எதிராக, முதல்-அமைச்சருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக கவர்னரிடம் மனு கொடுத்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்து உள்ளது.

மேலும் ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் அளித்து உள்ளனர். இது கட்சிக்கு விரோதமானது. இத்தகைய செயல், தான் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக் கொடுக்கும் நிலையை உண்டாக்குவதால், இந்திய அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின்படி இந்த 19 எம்.எல்.ஏ.க்களும் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள்.

இதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் பிரிவு 6-ன் கீழ் சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளேன். அதில், அந்த 19 எம்.எல்.ஏ.க்களையும் தகுதியின்மையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளேன்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ஊடகங்களில் அவர்களின் பேட்டியை பார்த்தேன். பத்திரிகை செய்திகளிலும் பார்த்தேன். அவர்கள் கட்சிக்கு கட்டுப்படவில்லை. என்னிடமும் இதுசம்பந்தமான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து கவர்னரை சந்திக்க போகிறோம் என்றும் கூறவில்லை. அவங்களாகவே அப்படி ஒரு முடிவை எடுத்து, கட்சியின் விதிமுறைகளை மீறிவிட்டனர்.

எனவே, கொறடா என்ற முறையில் இதுபற்றி சபாநாயகரிடம் நான் தெரிவித்து இருக்கிறேன். அவர்கள் கவர்னரை சந்தித்து கடிதம் தந்திருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து சபாநாயகரிடம் புகார் செய்து உள்ளேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தபோது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வாக்களித்தனர். அப்போதும் இதுபோன்ற புகாரை கொடுத்தேன். அதை பரிசீலித்து முடிவு எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். அதற்கான அதிகாரம் சபாநாயகரிடம்தான் உள்ளது.

19 எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. தன்னிச்சையாக முடிவு எடுத்தனர். அதையும் சபாநாயகரிடம் கூறி இருக்கிறேன்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் ப.தனபால் நடவடிக்கை எதுவும் எடுத்தாரா? என்பது பற்றி விசாரித்தபோது, சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:-

அரசு தலைமை கொறடாவின் புகாரின் அடிப்படையில் அவர் குறிப்பிட்டுள்ள 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சட்டசபை விதிகளின்படி, சபாநாயகர் பிறப்பிக்கும் நோட்டீசுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.

அரசு தலைமை கொறடா கூறும் புகாருக்கு அவர்கள் பதில் நோட்டீஸ் மூலம் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் பிறப்பித்துள்ள நோட்டீஸ், அவர்களுடைய கையில் கிடைத்த நாளில் இருந்து, அவர்கள் பதில் அளிக்க வேண்டிய நாட்கள் எண்ணப்படும்.

இவ்வாறு சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டது.

Thursday 24 August 2017

தனி மனித ரகசிய காப்பு உரிமை அடிப்படை உரிமையே சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆதார் அடையாள அட்டைக்காக  கைரேகை, கருவிழியை பதிவு செய்ய எதிர்ப்பு  தெரிவித்து  சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அதில், ‘அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா?’ என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி குறித்து விசாரித்து முடிவு செய்வதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கி‌ஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர்  என 9 நீதிபதிகள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலும் அளித்தனர்.

இந்த விசாரணையின்போது, கரக் சிங் மற்றும் எம்.பி. சர்மா வழக்குகளில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆராயப்பட்டது.

விசாரணை முடிந்து கடந்த 2–ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று  சுப்ரீம் கோர்ட் தனி மனித ரகசிய  காப்பு  உரிமை  அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஆதார் பயன்பாட்டு கொள்கையில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது. 

ஹஜ் பெருநாள் வரும் செப்.2ம்தேதி கொண்டாட ப்படும்

ஹஜ் பெருநாள்  2/9/2017 சனிக்கிழமை
அரபா நோன்பு  1/9/2017 வெள்ளி கிழமை

Tuesday 22 August 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 22/8/2017

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
நமதூர் ஜெயம் தெரு கருப்பட்டி மர்ஹூம் சுல்தான் அவர்களின் மகனாரும் இஸ்மாயீல், ஜலாலுதீன்       இவர்களின் சகோதரருமான அப்துல் ஹமீது அவர்கள் மௌத்.

Sunday 20 August 2017

எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருவாரூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. திருவாரூர் வன்மீகபுரத்தில் இதற்காக பந்தல் (அம்மா அரங்கம்) அமைக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நகரம் முழுவதும் அ.தி.மு.க. கொடி- தோரணங்கள் கட்டப்பட்டு திருவாரூர் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து காரில் திருவாரூருக்கு வந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையான நீடாமங்கலத்தில் அவருக்கு திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கொரடாச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விளமல்பாலம் அருகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருவாரூர் அரசு விடுதிக்கு சென்று முதல்-அமைச்சர் ஓய்வு எடுத்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு தொடங்கியது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி. இங்கு ஆண்டுக்கு 8 லட்சத்து 52 ஆயிரத்து 925 டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 10.7 சதவீதம் ஆகும். நெல் உற்பத்தியில் தமிழகத்தில் அதிக அளவு உற்பத்தி செய்யும் மாவட்டம் திருவாரூர் ஆகும். விவசாயிகளின் நிலை பற்றி பல படங்களில் எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். அது தான் அவருக்கு செல்வாக்கை பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர். நடித்த விவசாயி படம் 100 நாளை தாண்டி ஓடியது. அதன் அடிப்படையில் தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் ரூ.330 கோடி கடனை தள்ளுபடி செய்தார். பயிர்க்காப்பீடு முறையை கொண்டுவந்தார்.

எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். தவறை தட்டிக்கேட்பவர். கும்பகோணம் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த போதே வகுப்பு தலைவர் செய்த தவறை தட்டிக்கேட்டார். எம்.ஜி.ஆர். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பார். தவறு செய்தவர்களை தட்டிக்கேட்பார். அந்த வகையில் தான் சார்ந்த கட்சியில் கணக்கு கேட்டதற்காக, தவறை தட்டிக்கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது குணத்தை மட்டும் மாற்றிக்கொள்ளாத கொள்கை விளக்காக அவர் திகழ்ந்தார். அவர் வழியில் ஜெயலலிதாவும் அரசியல் வாரிசாக செயல்பட்டார்.

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தினார் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் அதிக அழுத்தம் கொடுத்து, நீதிமன்றத்துக்கு சென்று வெற்றி பெற்றார். காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.

திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, பெண்களால் எதையும் சாதிக்க முடிகிறது என்று பேசியதோடு, எத்தனை இன்னல்கள் வந்தாலும், தடைகள் ஏற்பட்டாலும் யாருக்காவும் நாங்கள் அஞ்சப்போவது இல்லை என்று கூறினார். அவருடைய வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஜெயலலிதா கூறியதைப்போல அ.தி.மு.க. 100 ஆண்டுகள் வேரூன்றி நிற்கும். ஜெயலலிதாவும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றினார். அந்த வகையில் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து 1,519 ஏரி, குளங்களை ரூ.100 கோடி செலவில் தூர்வாரி, அதில் உள்ள மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.300 கோடியில் 2,065 ஏரி, குளங்களில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அரசு விவசாயிகளின் அரசு. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களை, விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் 7 ஆயிரத்து 879 சேமிப்புகிடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த விவசாய உற்பத்திக்காக 4 முறை தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விருது பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதில் தமிழக விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து போராடி இந்த அரசு வெற்றி பெறும். 20 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு கல்வியிலும் புரட்சி செய்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. தற்போது அது 44.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 65 அரசு கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஏழை மாணவர்களும் உயர்கல்வி படிக்கும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சிலர் தவறான செய்தியை வெளியிடுகிறார்கள். எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்தியாவில் தமிழகம் தான் சட்டம்- ஒழுங்கு, சுகாதாரம், கல்வியில் சிறந்து விளங்குகிறது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்ட போதும் விலைவாசியை நாங்கள் உயர்த்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.319 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல்லை நாட்டினார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நன்றி கூறினார். 

Sunday 13 August 2017

மிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மாலையில் பலத்த மழை பெய்தது. இன்று காலை லேசாக மழை பெய்தது. மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை தூறி வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக் கடலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். உள் மாவட்டத்திலும், டெல்டா மாவட்டத்திலும் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறிஉள்ளார். 

Wednesday 9 August 2017

இந்தியா உள்பட 80 நாடுகளின் பிரஜைகள் கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்

இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது. 

கத்தார் நாட்டுக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகை தரும் பயணிகளின் தேசத்தை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது (30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில்) மாறுபடுகிறது. 

கத்தார் சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் பேசுகையில், “கத்தாருக்கு வருகையின் போது 80 தேசத்தை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். இப்பிராந்தியத்தில் கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி தேசமாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார். கடந்த நவம்பர் 2016-ல் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விசா தொடர்பான நகர்வு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி அமலுக்கு வருகிறது.

Tuesday 8 August 2017

11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா? இங்கு தெரிந்து கொள்ளலாம்


பான் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள், பொய்யான விவரங்களைக் கொடுத்து பெறப்பட்ட பான் கார்டுகள் உள்ளிட்ட போலி கார்டுகளை வருமானவரித்துறை முடக்கி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பான் கார்டு செயலலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளும் வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் இதுதொடர்பான தகவலை சரிபார்த்துகொள்ளலாம் எனதெரிவித்துள்ளது.

www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் 'சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'நோ யுவர் பான்' என்பதற்குள் நுழைய வேண்டும். அங்கு பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய எண் வரும். அதைப் பதிவு செய்தால், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டு வாங்கியுள்ள 29 கோடி பேரில் 6.2 கோடி பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், 5.2 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் கூறியுள்ளார்.

Sunday 6 August 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 6/8/2017

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

நமதூர் வடக்குத் தெரு கோசா வீட்டு மர்ஹூம் கொ.ம.நெ.அப்துல்லா அவர்களின் மனைவியும் M.சாதிக்பாட்ஷா,
S.செய்யது பஹூருதீன் ஆகியோர்களின் மாமியாரும்,A.தமீமுல் அன்சாரி,A.ஹமீது நத்தர் ஆகியோர்களின் தாயாருமாகிய                     " தங்கம்மா "என்கிற ஹாஜியா ரஹ்மத்து நிஸா இன்று சென்னையில்  (06/08/2017) மௌத்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5.30 மணிக்கு நமதூரில் நடைபெறும்.

அன்னாரது மஹ்ஃபிரத்திற்காக
துஆ செய்வோம்.

Saturday 5 August 2017

குடியரசு துணை தலைவர் தேர்தல்; வெங்கய்யா நாயுடு வெற்றி

புதிய குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்காக இன்று வாக்கு பதிவு காலையில் தொடங்கியது.  அதன்பின்பு மாலை 5 மணியளவில் வாக்கு பதிவு நிறைவு பெற்றது.

வாக்கு பதிவிற்கான மொத்தமுள்ள 785 வாக்குகளில் 711 வாக்குகள் பதிவாகியுள்ளன.  இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு முன்னிலை பெற்றார்.  இந்நிலையில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதீய ஜனதா வேட்பாளர் வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Thursday 3 August 2017

நமதூர் மௌத் அறிவிப்பு3/8/2017

நமதூர் தெற்கு தெரு பட்டானி வீட்டு ஜாஹிர் ஹூசைன் அவர்களின் தகப்பனாரும்,ஹலிலூர் ரஹ்மான் சுல்தான் கபிர் இவர்களின் மச்சானுமாகிய நெய்னா முஹம்மது அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நல்லடக்கம் நேரம் மாலை 3:30 மணிக்கு