Friday, 25 August 2017

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ‘நோட்டீஸ்’ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்குமாறு கோரி தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்.

இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூந்தமல்லி ஏழுமலை, பெரம்பூர் வெற்றிவேல், திருப்போரூர் கோதண்டபாணி, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், அரூர் முருகன், நிலக்கோட்டை தங்கதுரை, அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் ரெங்கசாமி, மானாமதுரை மாரியப்பன் கென்னடி, ஆண்டிப்பட்டி தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் கதிர்காமு, கம்பம் ஜக்கையன், சாத்தூர் சுப்பிரமணியன், பரமக்குடி முத்தையா, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, ஓட்டப்பிடாரம் சுந்தரராஜ் ஆகிய 19 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

14.2.2017 அன்று அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமித்து எடுத்த முடிவுக்கு எதிராக எந்தவித தீர்மானமோ, முடிவோ எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த 19 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கட்சி தலைமைக்கு எதிராக, முதல்-அமைச்சருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக கவர்னரிடம் மனு கொடுத்து இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்து உள்ளது.

மேலும் ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் அளித்து உள்ளனர். இது கட்சிக்கு விரோதமானது. இத்தகைய செயல், தான் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக் கொடுக்கும் நிலையை உண்டாக்குவதால், இந்திய அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின்படி இந்த 19 எம்.எல்.ஏ.க்களும் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள்.

இதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் பிரிவு 6-ன் கீழ் சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளேன். அதில், அந்த 19 எம்.எல்.ஏ.க்களையும் தகுதியின்மையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளேன்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ஊடகங்களில் அவர்களின் பேட்டியை பார்த்தேன். பத்திரிகை செய்திகளிலும் பார்த்தேன். அவர்கள் கட்சிக்கு கட்டுப்படவில்லை. என்னிடமும் இதுசம்பந்தமான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து கவர்னரை சந்திக்க போகிறோம் என்றும் கூறவில்லை. அவங்களாகவே அப்படி ஒரு முடிவை எடுத்து, கட்சியின் விதிமுறைகளை மீறிவிட்டனர்.

எனவே, கொறடா என்ற முறையில் இதுபற்றி சபாநாயகரிடம் நான் தெரிவித்து இருக்கிறேன். அவர்கள் கவர்னரை சந்தித்து கடிதம் தந்திருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து சபாநாயகரிடம் புகார் செய்து உள்ளேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தபோது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வாக்களித்தனர். அப்போதும் இதுபோன்ற புகாரை கொடுத்தேன். அதை பரிசீலித்து முடிவு எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். அதற்கான அதிகாரம் சபாநாயகரிடம்தான் உள்ளது.

19 எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. தன்னிச்சையாக முடிவு எடுத்தனர். அதையும் சபாநாயகரிடம் கூறி இருக்கிறேன்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் ப.தனபால் நடவடிக்கை எதுவும் எடுத்தாரா? என்பது பற்றி விசாரித்தபோது, சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:-

அரசு தலைமை கொறடாவின் புகாரின் அடிப்படையில் அவர் குறிப்பிட்டுள்ள 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சட்டசபை விதிகளின்படி, சபாநாயகர் பிறப்பிக்கும் நோட்டீசுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.

அரசு தலைமை கொறடா கூறும் புகாருக்கு அவர்கள் பதில் நோட்டீஸ் மூலம் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் பிறப்பித்துள்ள நோட்டீஸ், அவர்களுடைய கையில் கிடைத்த நாளில் இருந்து, அவர்கள் பதில் அளிக்க வேண்டிய நாட்கள் எண்ணப்படும்.

இவ்வாறு சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment