எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருவாரூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. திருவாரூர் வன்மீகபுரத்தில் இதற்காக பந்தல் (அம்மா அரங்கம்) அமைக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நகரம் முழுவதும் அ.தி.மு.க. கொடி- தோரணங்கள் கட்டப்பட்டு திருவாரூர் விழாக்கோலம் பூண்டு இருந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து காரில் திருவாரூருக்கு வந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையான நீடாமங்கலத்தில் அவருக்கு திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கொரடாச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விளமல்பாலம் அருகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருவாரூர் அரசு விடுதிக்கு சென்று முதல்-அமைச்சர் ஓய்வு எடுத்தார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு தொடங்கியது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி. இங்கு ஆண்டுக்கு 8 லட்சத்து 52 ஆயிரத்து 925 டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 10.7 சதவீதம் ஆகும். நெல் உற்பத்தியில் தமிழகத்தில் அதிக அளவு உற்பத்தி செய்யும் மாவட்டம் திருவாரூர் ஆகும். விவசாயிகளின் நிலை பற்றி பல படங்களில் எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். அது தான் அவருக்கு செல்வாக்கை பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர். நடித்த விவசாயி படம் 100 நாளை தாண்டி ஓடியது. அதன் அடிப்படையில் தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் ரூ.330 கோடி கடனை தள்ளுபடி செய்தார். பயிர்க்காப்பீடு முறையை கொண்டுவந்தார்.
எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். தவறை தட்டிக்கேட்பவர். கும்பகோணம் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்த போதே வகுப்பு தலைவர் செய்த தவறை தட்டிக்கேட்டார். எம்.ஜி.ஆர். தவறு செய்தால் மன்னிப்பு கேட்பார். தவறு செய்தவர்களை தட்டிக்கேட்பார். அந்த வகையில் தான் சார்ந்த கட்சியில் கணக்கு கேட்டதற்காக, தவறை தட்டிக்கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது குணத்தை மட்டும் மாற்றிக்கொள்ளாத கொள்கை விளக்காக அவர் திகழ்ந்தார். அவர் வழியில் ஜெயலலிதாவும் அரசியல் வாரிசாக செயல்பட்டார்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தினார் ஜெயலலிதா. காவிரி பிரச்சினையில் அதிக அழுத்தம் கொடுத்து, நீதிமன்றத்துக்கு சென்று வெற்றி பெற்றார். காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.
திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, பெண்களால் எதையும் சாதிக்க முடிகிறது என்று பேசியதோடு, எத்தனை இன்னல்கள் வந்தாலும், தடைகள் ஏற்பட்டாலும் யாருக்காவும் நாங்கள் அஞ்சப்போவது இல்லை என்று கூறினார். அவருடைய வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா கூறியதைப்போல அ.தி.மு.க. 100 ஆண்டுகள் வேரூன்றி நிற்கும். ஜெயலலிதாவும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றினார். அந்த வகையில் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து 1,519 ஏரி, குளங்களை ரூ.100 கோடி செலவில் தூர்வாரி, அதில் உள்ள மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.300 கோடியில் 2,065 ஏரி, குளங்களில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அரசு விவசாயிகளின் அரசு. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களை, விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் 7 ஆயிரத்து 879 சேமிப்புகிடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த விவசாய உற்பத்திக்காக 4 முறை தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு விருது பெற்றுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதில் தமிழக விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து போராடி இந்த அரசு வெற்றி பெறும். 20 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு கல்வியிலும் புரட்சி செய்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. தற்போது அது 44.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 65 அரசு கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏழை மாணவர்களும் உயர்கல்வி படிக்கும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சிலர் தவறான செய்தியை வெளியிடுகிறார்கள். எம்.ஜி.ஆர். வழியில் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்தியாவில் தமிழகம் தான் சட்டம்- ஒழுங்கு, சுகாதாரம், கல்வியில் சிறந்து விளங்குகிறது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்ட போதும் விலைவாசியை நாங்கள் உயர்த்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.319 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல்லை நாட்டினார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment