வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1–ந் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரிடம் நேற்று டிராபிக் ராமசாமி முறையிட்டார்.
அப்போது, ‘டிரைவர்களாக வேலை செய்பவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை, வாகன உரிமையாளரிடம் கொடுத்துவிடுவது வழக்கம். எனவே, அவர்களால் அசல் உரிமத்தை வைத்திருக்க இயலாது. அசல் ஓட்டுனர் உரிமம் திடீரென தொலைந்துவிட்டால், புதிதாக வாங்குவதற்கும் பல நடைமுறைகள் உள்ளதால் உடனடியாக பெறமுடியாது. அதுவரை சம்பந்தப்பட்ட நபர் வாகனங்களை ஓட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று டிராபிக் ராமசாமி கூறினார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘இந்த விவகாரத்தில் தற்போது எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வாகனத்தை ஓட்டும்போது வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருப்பதில் என்ன சிரமம் உள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இதேபோல கே.அஸ்வின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் அசல் ஓட்டுனர் உரிமத்தைத்தான் வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், அந்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் புது உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. எனவே அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
No comments:
Post a Comment