Saturday 25 July 2015

கலை, வணிகவியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் மதிப்பு!


பொறியியல் படிப்பில் சேருவதே பெருமையாகக் கருதப்பட்ட காலம் அது. தன் மகன் பி.இ. சேர்ந்திருக்கிறான் என்பதை பெற்றோர் பெருமையாகக் கூறிக் கொள்வர்.
2008-ஆம் ஆண்டு வரை இந்த நிலை இருந்தது உண்மைதான். ஆனால், 2008-இல் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த போது, அந்நிகழ்வு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தகவல் தொழில்நுட்பப் பணிகளை பிற நாடுகளுக்கு அளிக்கும் பிரதான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த நிலையில் பொருளாதாரப் பின்னடைவைச் சீர்செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அயல் பணிகள் (ஆடஞ) வழங்குவதை அமெரிக்க நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
இது இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், அந்தத் துறையில் வேலைவாய்ப்பையும் வெகுவாக பாதித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது. அதே நேரம் கலை, வணிகவியல் படிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றன என்கின்றனர் பேராசிரியர்கள்.
உதாரணமாக, 2013-14 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் 2,07,141 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு முடிவில் 1,27,838 இடங்களே நிரம்பின; 79,303 இடங்கள் காலியாக இருந்தன.
ஆனால், 2014-15 கல்வியாண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இடம் பெற்றபோதும், 1,02,700 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,02,000 இடங்கள் காலியாக இருந்தன.
மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதால், படிப்புகளை மட்டுமின்றி கல்லூரிகளையே இழுத்து மூடும் நிலைக்கு பொறியியல் கல்வி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இழுத்து மூடப்படும் 17 கல்லூரிகள்
2013-14 ஆம் ஆண்டில் சேர்க்கை குறைந்தவுடன், 80-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற்று இசிஇ, எம்.சி.ஏ., எம்பிஏ, பி.டெக். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை இடங்களை பாதியாகக் குறைத்தன.
இந்த நிலையில், 2014-15 கல்வியாண்டில்
30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதனால் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட வருவாய் இழப்பைச் சந்தித்தன.
இந்த பாதிப்பு காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த 17 பொறியியல் கல்லூரிகள், கல்லூரியையே முழுமையாக இழுத்து மூட இப்போது (2015-16 கல்வியாண்டில்) விண்ணப்பித்திருப்பதாக ஏஐசிடிஇ தென் மண்டல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறையத் தொடங்கிய நிலையில், கலை, வணிகவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் 2011-ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததால், சென்னைப் பல்கலைக்கழகம் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் முக்கியப் படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் உயர்த்திக் கொள்ள 2011-இல் அனுமதி அளித்தது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகள் பி.காம்., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50-லிருந்து 70-ஆக உயர்த்திக் கொண்டன.
ஆனால், அதன் பிறகும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
2014-15 கல்வியாண்டில், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர மொத்தம் 13 ஆயிரம் பேரும், அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
சென்னை, அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பல்வேறு படிப்புகளில் சேர 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். மாலை நேரப் பிரிவில் சேர 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இது கடந்த ஆண்டுகளை விட எண்ணிக்கையில் மிக அதிகம். அத்துடன், படிப்புகளைப் பொருத்த வரை வணிகவியல் படிப்புக்கே அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
தனியார் வங்கி நிறுவனங்கள் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கலை, அறிவியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்யத் தொடங்கிவிட்டன. மேலும், இதன் படிப்புக் காலமும் குறைவு. இவையே கலை, வணிகவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்புக்குக் காரணம் என்கின்றனர் அந்தக் கல்லூரி நிர்வாகிகள்.
இரு மடங்கு விண்ணப்பம்
கலை, அறிவியல் படிப்புகள் மீது ஆண்டுக்கு ஆண்டு ஆர்வம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வமும் இப்போது அதிகரித்துள்ளது.
2015-16 கல்வியாண்டில் புதிய கலை, அறிவியல் கல்லூரி தொடங்க கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 60-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டுகளை விட இரு மடங்கு அதிகம். கடந்த ஆண்டுகளைப் பொருத்த வரை அதிகபட்சம் 30 விண்ணப்பங்களே பெறப்பட்டதாக இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்காலம் எப்படி?
கலை, வணிகவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரிப்பை உணர்ந்த மத்திய அரசு, தரமான, திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இப்போது மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் நம்மோடு பகிர்ந்துகொண்ட விவரம்:
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடும் நிலை இப்போது உருவாகி வருகிறது. அதே நேரம் கலை, அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இதை அறிந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கலை, வணிகவியல் படிப்புகளை முடித்து வெளிவரும் பட்டதாரிகளை திறன் மிக்கவர்களாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பட்டப் படிப்பு தர நிர்ணயத் திட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.
அதன்படி, படிப்பின் இறுதியாண்டில் மாணவர் பரிசோதிக்கப்பட்டு, முடித்துள்ள பட்டப் படிப்புக்கும், மதிப்பெண்ணுக்கும் மாணவர் எந்த அளவு தகுதியானவர் என்பது குறிப்பிடப்படும்.
இந்த நடைமுறை மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதும், தொழில்நிறுவனங்கள் தேர்வு செய்வதும் எளிதாகிவிடும்.
மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்யவுள்ள தேசிய கல்விக் கொள்கையில் இதுபோல மேலும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற உள்ளன என்றார்.

No comments:

Post a Comment