Thursday, 7 December 2017

மத்திய அரசின் 139 சேவைகள்-திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31 ந்தேதிவரை நீட்டிப்பு


மத்திய அரசின் 139 சேவைகள் மற்றும்  நலத்திட்டங்களுக்கு ‘ஆதார்’ எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.

அந்த பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு, ஜூலை 31–ந்தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த கால அவகாசம் ஆகஸ்டு 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், திடீரென மத்திய அரசு இந்த காலக்கெடுவை நீட்டித்து  உத்தரவிட்டது. அதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31–ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை அளிப்பதற்கான கால அவகாசமும் டிசம்பர் 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் டிசம்பர் 31–ந்தேதிதான் கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், பான்–ஆதார் இணைப்புக்கும் டிசம்பர் 31–ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டு  உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ந்தேதி வரை இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய  அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற ஆதார்  கட்டாயமாக இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31 வரை நீடிக்கும் வகையில்,  நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்சிடம்  அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மத்திய அரசின் 135 சேவைகள் மற்றும்  நலத்திட்டங்களுக்கு ‘ஆதார்’ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2017 மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து 2018 மார்ச் 31 வரை நீடிக்கப்படும் என கூறி உள்ளார்.

No comments:

Post a Comment