Monday, 8 August 2016

திருவாரூரில் ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டுள்ள மனுநீதிச்சோழன் மணிமண்டபத்தை திறக்க கோரிக்கை

திருவாரூரில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மனுநீதிச்சோழன் மணிமண்டபத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுவின் கன்றைக் கொன்ற மகன் வீதிவிடங்கனை, தேர்க்காலில் இட்டு கொன்று, பசுவுக்கு நீதி வழங்கியதாக மனுநீதிச்சோழனைப் பற்றி இலக்கியங்கள் யாவும் விவரிக்கின்றன. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் 2-ஆம் பிரகாரத்தின் தென் புறச்சுவரில் கி.பி. 1123-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்வெட்டில் இலக்கியங்கள் மனுநீதிச்சோழனின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
திருவாரூரில் நீதியை நிலைநாட்டிய மனுநீதிச்சோழனுக்கு மணிமண்டமும், கல்லணையில் கரிகாலற்சோழனுக்கு நினைவு மண்டபமும், மதுரையில் தமிழ்த்தாய்க்கு ரூ.100 கோடியில் சிலை அமைக்கப்படுமென்று கடந்த 3.5.2013-இல் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தொடர்ந்து, திருவாரூரில் மனுநீதிச்சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, திருவாரூர் பனகல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சோமசுந்தரம் பூங்காவில் 247 சதுர மீட்டரில் ரூ.1.10 கோடியில் மணிமண்டபம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, 20.8.2015 அன்று மணிமண்டபத்துக்கான பூமிபூஜை நடைபெற்றது. பொதுப்பணித் துறையினர் சார்பில் கோபுரம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மேலும், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் வடிவமைக்கப்பட்ட மனுநீதிசோழனின் 10 அடி உயர வெங்கலச்சிலை  மண்டபத்தில் நிறுவப்பட்டு, திறப்பு விழாவுக்காக துணியால் மறைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தைச் சுற்றி பூச்செடிகளும், பனகல் சாலையிலிருந்து மணிமண்டபம் வரை நடந்து செல்ல நடைபாதையும், அலங்கார மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மணிமண்டபத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், எப்போது திறக்கப்படும் என்பது திருவாரூர் பகுதி மக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

No comments:

Post a Comment