மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் நுழைவுத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலைய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர் மற்றும் இதர இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மத்தியத் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத்தேர்வுக்கான பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நவ.13-ம் தேதியன்று நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், முதல் நிலைத் தேர்வு பயிற்சி பெற விரும்பும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள் ஆக.28 முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தை செப்.22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வி தகுதியாகிய பட்டப்படிப்பு பிஏ, பிஎஸ்சி, பிகாம் மற்றும் தொழிற்பட்டப் படிப்பான பிஈ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி, பிஎஸ்சி (வேளாண்மை) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் அனைத்தும்) முடித்த விண்ணப்பதாரர்களின் கல்வி, வயது, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களின் நகல்களை சரிபார்த்து வரிசை எண்படி விண்ணப்பம் வழங்கப்படும் (எக்காரணத்தைக் கொண்டும் குறிப்பிட்ட கல்வித் தகுதி பெறாத மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது).
விண்ணப்பதாரர் 1.8.2017 அன்று 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பிலிருந்து ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 5 ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 3 ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு விலக்களிக்கப்படுகிறது. தமிழக மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்களுக்கு
விண்ணப்பம் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment