தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இயக்குநரகத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும்.
இந்நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்புகளின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷங்களும், விடைத்தாளில் விவரங்களை நிரப்ப 5 நிமிஷங்களும் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும். இவர்களுக்கும் கூடுதலாக 15 நிமிஷங்கள் வழங்கப்படும்.
பிளஸ் 2 பொதுப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு (தமிழ் - ஆங்கிலம்) உள்ளிட்ட பாடப் பிரிவினருக்கான செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment