Tuesday 9 August 2016

ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்: அதிமுக வெளிநடப்பு

திருத்தங்களுடன் கூடிய சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. அவையில் இருந்த 443 உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், அதிமுக எம்.பி.க்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதால், அடுத்த நிதியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்புக்கு வித்திடும் ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஊழலையும், கருப்புப் பணப் புழக்கத்தையும் வேரறுப்பதற்கு ஜிஎஸ்டி மசோதா துணை நிற்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜிஎஸ்டி மசோதா, எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றி கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் முடங்கியிருந்தது. இந்த நிலையில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அதனை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக மக்களவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால், அங்கு அதனை நிறைவேற்ற இயலவில்லை.
இதையடுத்து, ஜிஎஸ்டி மசோதாவில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொருள்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் நலனுக்காக கூடுதலாக 1 சதவீத வரி விதிக்க வகை செய்யும் அம்சத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த ஷரத்து நீக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால், முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தெரிவித்த திருத்தங்களுடன் கூடிய புதிய ஜிஎஸ்டி மசோதாவை மக்களவையின் ஒப்புதலுக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா அமலாகும் பட்சத்தில், வரி ஏய்ப்புகள் குறையும் என்று அப்போது தெரிவித்த ஜேட்லி, இதன் மூலம் நாட்டில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி.க்கள், ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்டால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கவலை தெரிவித்தனர். அதன்பிறகு பேசிய காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். விவாதத்தில் இறுதியாக பேசிய மோடி, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற உறுதுணை அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து அவையில் அவர் மேலும் பேசியதாவது:
"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் மூலம் இந்திய தேசத்தின் விடுதலை வேள்வியை கடந்த 1942-ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகள் தொடங்கியது இதே நாளில்தான் (ஆக.8). வரலாற்றில் மறக்க முடியாத இந்த தினத்தில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மத்திய அரசுக்கோ, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல. இது அனைவருக்குமான வெற்றி. குறிப்பாக இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.
மாற்றத்தை நோக்கி இந்த தேசம் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் ஜிஎஸ்டி மசோதா அமைந்துள்ளது.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், மக்கள் வாங்கும் பொருள்கள் அனைத்துக்கும் ரசீது கொடுக்க வேண்டிய நிர்பந்தம் வர்த்தகர்களுக்கு ஏற்படும். இதனால் கருப்புப் பணப் பதுக்கல் தடுக்கப்படுவதுடன் ஊழலும் வேரறுக்கப்படும். நாட்டின் பொருளாதார நிலை மேலும் வலுவடையும்.
ஜிஎஸ்டி சட்டத்தால் கடுமையான வரி விதிப்புகள் இனி காணாமல் போகும் என்றார் பிரதமர் மோடி.
இதைத் தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு சற்று முன்னதாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு மக்களவையில் இருந்த 443 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததை அடுத்து திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

No comments:

Post a Comment