Tuesday 30 August 2016

நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கலாம்: சட்டத் திருத்த மசோதா தாக்கல்

மாநகராட்சியைத் தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களையும் மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இதில், தலைவர்கள் நேரடியாகத் தேர்தல் முறையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சில சூழ்நிலைகளில், தலைவர், மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும், மன்ற உறுப்பினர்கள் தலைவரின் ஒத்துழைப்பையும் பெறுவதில்லை.
தலைவர், மன்ற உறுப்பினர் ஆகிய இருவரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், பொது மக்களுக்கு பணிகளைச் செய்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும், மன்ற நடவடிக்கைகளில் கருத்தொற்றுமை ஏற்படுவதற்கும் தடைகளாக இருக்கின்றன.
இது, அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு இடையேயிருந்து ஒருவரை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுப்பதற்காக மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் இயற்றப்பட்டது.
ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளுக்காக...: மாநிலத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளைக் கொண்டிருக்கும் வகையில், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவரையும் மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு உள்ளேயிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது என கூறப்பட்டிருந்தது.
குரல் வாக்கெடுப்பால் நிறைவேறும்: இந்த மசோதா பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (செப். 2) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறும்.
இதன் வாயிலாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள் மறைமுகத் தேர்தல் முறையில் மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.

No comments:

Post a Comment