Saturday, 6 August 2016

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 281 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு


திருவாரூர் மாவட்டத்தில் ஆபரேஷன் முஸ்கான் என்ற சிறப்பு தணிக்கை மூலம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 281 குழந்தைகள், தொழிலாளர்கள், கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்பது, காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பது, ஆதரவற்று இருந்து வரும் குழந்தைகளை அடையாளங்கண்டு உரிய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளுக்காக ஆபரேஷன்  முஸ்கான் என்ற சிறப்புப்பணியை காவல்துறை மற்றும் குழந்தைகள் நல அமைப்பு அலுவலர்கள் இணைந்து ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தி குழந்தைகளை மீட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருவாரூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முகம்மது பலூல்லா தலைமையில் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் காமாட்சி,  லெட்சுமி, உதவி ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் போலீஸார் அடங்கிய 3 தனிப் படைகள் உட்கோட்ட வாரியாக அமைக்கப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களும் இடம் பெற்றிருந்தனர்.    
இந்த தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்கள், காணாமல்போன குழந்தைகள் உள்ளனரா என  தணிக்கை நடத்தியதில் 40 பெண் குழந்தைகள் உள்பட  281 குழந்தைத்  தொழிலாளர்கள் மற்றும் காணாமல் போன குழந்தைகளைக் குழந்தைகள் நல அலுவலர்கள் உதவியுடன் மீட்டு பெற்றோர்களிடமும், குழந்தைகள் காப்பகங்களிலும் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment