திருவாருரில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் கல்லூரி முதல்வர், 2 பேராசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் திருவிக அரசுக்கலைக்கல்லூரி இயங்கி வருகிறது . இதில் 2800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படித்து வரும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்குரிய விடுதியில் கூடுதல் இடவசதி ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆக.3-ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வணிகவியல் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வகுப்பு புறக்கணிப்பில் பங்கேற்காமல் வகுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம டைந்த இந்திய மாணவர் சங்க வரலாறு பிரிவு மாணவர்களுக்கும் பி.காம் பிரிவு மாணவர் களுக்குமிடையே ஆக. 4-ஆம் தேதி தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுக்கா போலீஸார் மற்றும் நூற்றுக்கணக்கான போலீஸார் கல்லூரிக்குள் தகராறில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர். கல்லூரியின் காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரியில் எம்எஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் 2-ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர் நீலன்ஹாம்ஸ்ட்ராங் தன்னையும் தன்னை சேர்ந்த 4 மாணவர்களையும் கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் ராமு, பேராசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் மாணவர்கள் தாக்கியதாக தாலுக்கா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் பேராசிரியர்கள் ராமு, சண்முகசுந்தரம் மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கல்லூரியின் வரலாறு பிரிவு மாணவர்களான தெட்சிணாமூர்த்தி, செந்தமிழ் வேந்தன், சதீஸ்கண்ணன், ஜெகதீசன், பிரகாஷ், தினேஷ், ரகுராமன் மற்றும் நீலன்ஹாம் ஸ்ட்ராங் ஆகியோர் தங்களை தாக்கியதாகவும், இதற்கு கல்லூரியின் முதல்வர் பொறுப்பு வகித்து வரும் பேராசிரியர் சிவராமன் தூண்டுதலே காரணம் என்றும் பேராசிரியர்கள் ராமு மற்றும் சண்முகசுந்தரம் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸார் சிவராமன் மற்றும் 8 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்லூரியின் கலவர சம்பவம் தொடர்பாக கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஆக.8-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வெள்ளிக்கிழமை கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரிகளின் தஞ்சை மண்டல இணை இயக்குனர் பியாட்டிரிஸ்மார்கரெட் ஆய்வு மேற்கொண்டார். கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இதற்கிடையே மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற என்.எம். மயில்வாகனன் சனிக்கிழமை கல்லூரிக்கு நேரில் ஆய்வு செய்துள்ளார்.
No comments:
Post a Comment