கோப்புப் படம்
மின் இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் மானியம் நேரடி பயன்மாற்ற முறையில் வழங்கப்படும்.
அதிகளவில் மானியங்கள் வழங்கப்படுவதாக வெகுவாக விமர்சித்துவரும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.
"அளவிடப்படாத மானியங்களால் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. மானியம் என்பது அளவிடத்தக்கதாகவும், அடையாளம் காணப்பட்ட பிரிவினருக்கும் வழங்கப்படும் தொகையாக இருக்க வேண்டும். மானியத்தின் பலன்களை முறையற்ற வகையில் பலரும் அனுபவிப்பதன் விளைவாக அரசுக் கருவூலத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புக்கு இழப்புகள் ஏற்படுகின்றன" ஜேட்லி சமீபகாலமாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ள மத்திய அரசு, மின் இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் மானியம் நேரடி பயன்மாற்ற முறையில் வழங்குமாறு அறிவுறுத்தவுள்ளது.
இத்திட்டத்தால், 100% மின் வசதி பெற்றுள்ள மாநிலங்கள் மானிய விலை மண்ணெண்ணெய் பெற முடியாத நிலை ஏற்படும் என நிதியமைச்சக வாட்டாரம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளது.
மற்ற மாநிலங்களில், மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதாக இல்லை மானியத் தொகையை பெற்றுக்கொள்வதாக என்பதை பயனாளர்களே முடிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும். மத்திய அரசு, சமூகநலத் துறைக்கான ஒத்துக்கீடுகள் சிலவற்றை ரத்து செய்து திட்டசெலவினங்களை குறைக்க முடிவு செய்தது. அதன் அடிப்படையிலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
2011 சென்செஸ் புள்ளிவிவரம், மண்ணெண்ணெய் சமையலுக்காக பயன்படுத்தப்படுவதைவிட எரிபொருளாகவே பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கிறது. எனவே, மண்ணெண்ணெய் மானிய ஒதுக்கீடு இனிமேல் இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையிலேயே இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் 2011 சென்சஸ் அறிக்கையில், "நகர்ப்புறம் மற்றும் சிறு நகரங்களில் மண்ணெண்ணெய் பயன்பாடு ஏறத்தாழ புழக்கத்தில் இல்லை. அங்கு, சமையல் காஸ் பயன்படுத்துகிறது. கிராமப்புறங்களிலும் பையோ மாஸ் எரிவாயுவே பயன்படுத்தப்படுகிறது. இந்திய கிராமங்களில் 2%-க்கும் குறைவானவர்களே மண்ணெண்ணெய் பயன்படுத்துகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், மண்ணெண்ணெய் மீதான மானியம் ரூ.5,852.14 கோடியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பட்ஜெட்டில், மொத்த பெட்ரோலிய மானியம், (அதாவது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய், எல்.பி.ஜி, டீசலுக்கான மானியம்) ரூ.63,427 கோடியாக இருக்கிறது.
மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம், பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய்யை டீசலில் கலப்படம் செய்வது கட்டுப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவில் 40% டீசல் கலப்படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
2011 சென்சஸ் அறிக்கையை குறிப்பிட்டு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை அடியோடு ரத்து செய்யும் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்திருந்தது.
No comments:
Post a Comment