Monday 15 December 2014

மீத்தேன் ஒப்பந்தம் நீடிக்க கூடாது -ஜவாஹிருல்லா திருவாரூரில் பேட்டி


 இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜவாஹிருல்லா.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்தப் பேட்டி:
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கிரிமினல் மற்றும் சொத்து விவகாரத்தில் பொது சட்டம் இருக்கலாம். ஆனால், திருமணம் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பிரச்னைகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வரக் கூடாது. சிறுபான்மை இன மக்களை ஆசை வார்த்தை கூறி கட்டாய மதமாற்றம் செய்ய சங்பரிவார் அமைப்புகள் முயற்சி செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சட்டபேரவை கூட்டத் தொடரில் அமைதி காத்துவிட்டு இப்போது மின் கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது. மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியுள்ளதால் சாதாரண மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்த வரவழைக்கப்பட்ட யூரியா உரம் தரமில்லாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெல்டா மாவட்ட பகுதி மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் வளமான பூமி மலட்டு பூமியாக மாறும் என்பதால், 2015 ஜனவரி 4-ம் தேதி முடிவடையும் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது. டெல்டா மாவட்டங்களை விவசாயம் பாதுகாக்கப்பட்ட பூமியாக அறிவிக்க வேண்டும். ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் பெட்ரோல், எரிவாயு என்ற பெயரில் ஆழ்குழாய் அமைத்து சோதனை செய்யும் பணிகளை கைவிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கேரளம் ஆண்டுக்கு 10 சதவீதம் கடைகளை மூடி 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறியுள்ளது. இதை தமிழக அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது மாநில செயலர் ஹாஜா கனி, மாவட்ட தலைவா முஜீபூர் ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment