Tuesday, 23 December 2014

அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு கூடாது


திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன், நாகை ஆட்சியர் து. முனுசாமி ஆகியோர் தனித்தனியே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்த மாவட்டங்களில் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, அரசு இடங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. மக்கள் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆக்கிரமிப்பு குறித்து மக்களிடமிருந்து வரும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ள கோட்ட அளவில், கோட்டாட்சியர்கள், டிஎஸ்பிக்கள், வட்ட துணை ஆய்வாளர்கள் (நிலஅளவை), மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குநர் (நில அளவை) தலைமையில் ஆக்கிரமிப்பு தொடர்பான குறைகளை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் சட்டப்படியான குறைகள் இருந்தால் மக்கள் மனுக்களாக தொடர்புடைய வருவாய் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆக்கிரமிப்புக் குறித்து வரும் புகார் மனு மீது வட்டாட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு 60 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கையில் மனுதாரர் திருப்தி அடையவில்லையெனில் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு மனு செய்யலாம். மேல்முறையீட்டு மனு மீது 30 நாள்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment