Friday 5 December 2014

பழத்துக்குள் இருக்கும் புழுவைப் போல பூமியை கெடுப்பதை தொடரப் போகிறோமா?

?


மண்வளத்தைக் கெடுக்கும் குப்பை கூளங்கள் மற்றும் பாலிதீன் கழிவுகள்.
இன்று - உலக மண் தினம்
மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைத்தான் இறைவன் என்கிறது ஆன்மிகம். புல்லாகி, பூண்டாகி, புழுவாகி... குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன. தேசபக்தி, வீரம், கற்பு எல்லா வற்றையும் மண்ணோடு தொடர்பு படுத்திப் பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே அந்த மண்ணை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் என்று யோசித்தால், வேதனையே மிஞ்சும். மண்ணைப் பாதுகாக்கவும், அதைச் சீரழிக்காமல் நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
இது பற்றிய மேலும் விவரங்களைத் தருகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப் பேராசிரியருமான எம்.ராஜேஷ். “ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300 முதல் 1,000 ஆண்டு காலம் தேவைப்படுகிறது. ஆனால், வெள்ளம், சூறைக் காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் மண்வளம் அடித்துச் செல்லப்படுகிறது.
அதை விட மோசமாக மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. அதிகப் பயன் பாடு காரணமாக வளத்தை இழத்தல், அமிலம் அல்லது உவர்ப்புத் தன்மை அடைதல், ரசாயன உரங்களாலும், கழிவுகளாலும் வேதியியல் மாற்றத் துக்கு உள்ளாதால், விஷமடைதல் என்று நம் கண் முன்னாலேயே மண் வளம் அழிக்கப்படுகிறது.
முழு பூமிக்கும் பல்லுயிரியம் இருப்பதுபோல, மண்ணுக்குள்ளும் புரோட்டோசோவா, பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறு பூச்சிகள் என மிகப் பெரிய பல்லுயிரியம் உள்ளது. பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் மற்றும் வேதிப் பொருட்களால் அதனையும் நாம் அழித்து வருகி றோம். மண்ணையும் அழித்து, அதனை வளப்படுத்தும் உயிர்களை யும் அழித்து வருவதால் நம் மண் சூழல் மலடாகும் அபாயம் நெருங்கி வருகிறது.
இதை எல்லாம் தடுப்பதற்காக வும், மண் வளத்தைப் பாதுகாப்ப தற்காகவும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் டிசம்பர் 5-ம் தேதியை உலக மண் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
இப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் 2050-ம் ஆண்டு அப்போதையே மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியை நம்மால் கொடுக்க முடியாது. எனவே, ஐ.நா.வுடன் இணைந்து உலக மண் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள மண் அறிவியல் சங்கம் போன்றவையும் வருகிற 2015-ம் ஆண்டினை உலக மண் ஆண்டாக அறிவித்துள்ளன.
ஒரு பழத்துக்குள் இருக்கும் புழுவைப் போல மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப் படுத்திக்கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறான் என்று ஒரு சூழலியல் அறிஞர் கூறினார். அந்த அறியாமையில் இருந்து மீள இந்த தினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment