‘யுனெஸ்கோ’ அமைப்பின் பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை நகரம் இடம் பிடித்து இருப்பதை பிரதமர் மோடி பாராட்டினார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை தேர்வு
கலாசாரத் துறையில் சிறந்து திகழும் உலக நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ நேற்று வெளியிட்டது. இதில் உலகின் தலைசிறந்த 64 நகரங்களின் வரிசையில் இந்தியாவில் இருந்து சென்னை நகரமும் தேர்வாகி உள்ளது.
தென்னிந்தியாவின் கலாசார தலைநகர் என்னும் சிறப்பு அடைமொழியை கொண்டுள்ள சென்னை, பாரம்பரிய இசையில் செறிந்த வளத்தை கொண்ட நகரம் என்பதற்காகவும், இசைக்கு மிகுந்த ஊக்கம் அளித்து வருவதற்காகவும் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாழ்த்து
இதற்காக சென்னை நகர மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “யுனெஸ்கோவின் இசை பாரம்பரியம் மிக்க உலக நகரங்களின் பட்டியலில் சென்னையும் சேர்க்கப்பட்டு இருப்பதற்காக உங்களை வாழ்த்துகிறேன். நமது வளமையான கலாசாரத்துக்கு சென்னை நகரம் ஆற்றிவரும் பங்களிப்பு மிகவும் மதிப்பு மிகுந்தது. இத் தருணம் இந்தியாவிற்கு பெருமை தருவதும் ஆகும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
முதல்-அமைச்சர்
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக யுனெஸ்கோ அமைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றி. இசைத்துறையில் சென்னையின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் யுனெஸ்கோ அமைப்பு பாராட்டி அங்கீகரித்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம். சென்னை வாழ் மக்களுக்கும், அனைத்து இசைத்துறை கலைஞர்களுக்கும், இத்தருணத்தில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், “இசைக்காக உலக அளவில் சேர்க்கப்பட்ட 64 நகரங்களில் சென்னையும் ஒன்றாக உள்ளது. பல்வேறு படைப்புகளுக்காக யுனெஸ்கோ தேர்வு செய்துள்ள மொத்த நகரங்களின் எண்ணிக்கை 180 ஆகும். சென்னை மக்கள் இசையை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களின் கலாசாரம், பாரம்பரியத்தில் இசை ஒன்றாக உள்ளது. இந்த தருணத்தில் சென்னைக்கு கிடைத்துள்ள தனிச் சிறப்புக்காக சென்னை மக்களுக்கு, நீங்கள் தெரிவித்த பாராட்டுக்காக சென்னை மக்கள் சார்பாகவும், எனது சார்பிலும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment