மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்றும் கன மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார்வளைகுடாவையொட்டிய பகுதியில் நிலைகொண்டு உள்ளது.
இதன் காரணமாக 31–ந்தேதி காலை 8.30மணி நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ.மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ.மழையும் பதிவாகி உள்ளது.
இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.,
எப்படியும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை உண்டு.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment