திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மழை காரணமாக ஆணைவடபாதி, நெம்மேலி ஆகிய 2 இடங்களில் நிவாரண முகாம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சம்பா நடவு செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. இதில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில் வடிகால்கள் தூர்வாராததால் வயல்களில் தேங்கி நின்ற தண்ணீரை வடிய வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் மழை சற்று ஓய்ந்தது. ஒரு வாரத்திற்கு பின்னர் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பொக்லின் எந்திரத்தின் மூலம் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருவதால் மழை நீர் வடிந்து வருகிறது. மேலும் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
குளக்கரையின் தடுப்புச்சுவர் இடிந்தது
திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தில் சட்ரசங்கேணி குளம் உள்ளது. இந்த குளக்கரையின் தடுப்புச்சுவர் பழுதடைந்த நிலையில் இருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்றுமுன்தினம் திடீரென தடுப்புசுவர் இடிந்து விழுந்தது. இதனால் குளக்கரையின் தடுப்புச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
திருவாரூர்-68, நன்னிலம்-55, குடவாசல்-51, வலங்கைமான்-47, பாண்டவையாறு தலைப்பு-50, மன்னார்குடி-51, நீடாமங்கலம்-48, திருத்துறைப்பூண்டி-93, முத்துப்பேட்டை-25.
அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி-93 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் நடவு மற்றும் நேரடி நெல்விதைப்பு மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அரசடி தெரு, நரிக்குறவர் காலனி வீரன்நகர், மீனாட்சிவாய்க்கால், ரொக்ககுத்தகை, சண்முகசெட்டித்தெரு, வானகாரத்தெரு, அபிஷேககட்டளை தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல கோட்டூர் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் கோட்டூர் அருகே திருக்களார், அக்கரைக்கோட்டகம், அழகிரிகோட்டகம், சிதம்பரகோட்டகம், ஆண்டிகோட்டகம், செல்லபிள்ளையார்கோட்டகம், காடுவாகுடி, சோழங்கநல்லூர், கீழபுழுதுக்குடி, மாவட்டக்குடி, குலமாணிக்கம், அண்ணுக்குடி, களப்பால், சோலைக்குளம், மாணங்காத்தான்கோட்டம், பாலையூர், நொச்சியூர், பாலவாய், தேவதானம்பட்டி, புத்தகரம், காரைத்திடல் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment