தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன், வடகிழக்கு பருவ மழையும் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் கடலோர தமிழகத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
மேற்கு நோக்கி நகர்ந்துள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, மன்னார் வளைகுடா பகுதி அருகே வந்தால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 13 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 12 செ.மீ., நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 4 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
குறைந்த பருவ மழை
தமிழகத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வடகிழக்கு பருவ மழை, கடந்த 2 ஆண்டுகளாக சராசரியைவிட குறைவாகவே பெய்துள்ளது என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இங்கு ஓராண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 44 சதவீதம், வடகிழக்கு பருவமழை காலத்திலேயே கிடைக்கிறது. இந்த காலத்தில் பொதுவாக கடலோர மாவட்டங்களுக்கு 60 சதவீதமும், மற்ற மாவட்டங்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை பெய்யும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது வங்கக்கடலில் தொடர்ந்து புயல் சின்னங்கள் உருவாகின. பைலின்,ஹெலன், லெஹர், மாதி புயல்களால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியைவிட (44 செ.மீ.) 33 சதவீதம் குறைவாகவே பெய்தது. அதேபோல் 2012-ம்ஆண்டும் 16 சதவீதம் குறைவாகவே வடகிழக்கு பருவ மழை பெய்தது.
புயலால் மழை கிடைக்காது
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுவாக புயல் உருவானால் அதிக அளவில் மழை பெய்யும் என்ற கருத்து மக்களிடம் உள்ளது. புயல்கள் கரையை கடக்கும்போது மேகக் கூட்டங்களில் இருக்கும் ஈரப்பதத்தையும் கொண்டுசென்றுவிடும். இதனால் மழை அளவு குறைந்துவிடும். இதனால்தான் கடந்த ஆண்டுகளில் தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழை அளவு குறைந்தது’’ என்றார்.
இந்த ஆண்டு சரியான நேரத்தில் பருவ மழை தொடங்கி இருக்கிறது. புயல் சின்னங்கள் உருவாகாமல் காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்தால் இந்த ஆண்டு பருவ மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment