Friday, 31 October 2014

கருப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்

வெளிநாட்டு வங்கியில் கருப்புப் பணம் பதுக்கிவைத்திருந்த 627 இந்தியர்களின் கணக்கு விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
 
இதன்மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்பது குறித்த வழக்கில் மத்திய அரசிடம் உள்ள பட்டியலை சமர்ப்பிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ரஞ்சனா பி.தேசாய், மதன் லோக்கூர் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருப்புப் பணம் வைத்திருப் பவர்களின் பட்டியலை சமர்ப்பித் தார். அதில், வெளிநாட்டு வங்கி யில் கணக்கு வைத்துள்ள இந்தி யர்கள் 627 பேரின் விவரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் வாதிடும்போது, “கருப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளுடன் இந்திய அரசு மேற்கொண்ட கடிதப் பரிமாற்றம், அதற்கு அவர்கள் அளித்த பதில் விவரம் ஆகியவையும் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வகை செய்யும், இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம், அதன் விதிமுறைகள் ஆகியவையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இப்பட்டியலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “இதைப் பிரித்துப் பார்த்து யார், யாரெல்லாம் கணக்கு வைத்துள்ளார்கள் என்பதை அறிய நீதிமன்றம் விரும்பவில்லை. இப்பட்டியல் அப்படியே கருப்புப் பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கருப்புப் பணத்தை மீட்க தேவை யான நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவித்தனர்.
 
எச்எஸ்பிசி வங்கி
அப்போது முகுல் ரோத்கி, “இது ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கி கிளையில் உள்ள கணக்குகளின் பட்டியல். இவை பிரான்ஸ் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில், பெரும்பான்மை கணக்குகள் இந்தியர்களுடையது. மற்றவை வெளிநாடு வாழ் இந்தியர்களுடையது. இந்திய வரிச் சட்டத்தின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வழக்கு தொடர முடியாது.
வங்கி கணக்கு ரகசியங்களை வெளியிடுவதால், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மீறப்பட்டு அதன்மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் முறையிட எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், “சிறப்பு புலனாய்வுக் குழுவில் முன்னாள் நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு நடைமுறை பிரச்சினைகள் அனைத்தும் தெரியும். எனவே, மத்திய அரசுக்கு உள்ள சிரமங்களை புலனாய்வுக் குழுவிடம் அட்டர்னி ஜெனரல் தெரிவிக்கலாம். மனுதாரர் ராம் ஜெத்மலானியும் தனது தரப்பு கருத்தை அங்கு தெரிவிக்கலாம்” என்று அனுமதி அளித்தனர்.
அடுத்தமாதம் அறிக்கை
இப்பட்டியலை ரகசியமாக பாதுகாத்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கருப்புப் பணத்தை மீட்க தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அக்குழு எடுக்க வேண்டும் என்றும், அதுகுறித்த அறிக்கையை நவம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment