Saturday 25 October 2014

ஒளிக்க முடியாத தகவல்: இன்று தகவல் அறியும் உரிமை சட்ட தினம்



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு இச்சட்டம் பொருந்தாது.

இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

எப்போது தொடங்கியது:



2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி விஜயதசமி அன்று நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.


எப்படி பெறுவது:



தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம் குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

No comments:

Post a Comment