Saturday 18 October 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதேபோல, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக, அவர்களுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
இது தொடர்பாக ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜராகி முன் வைத்த வாதம்: மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் புரிந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மேல்முறையீடு செய்ய வசதியாக, அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சில மேல்முறையீடு வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அந்த வழக்குகளை முன்னுதாரணமாகக் கருதி ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அப்போது, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது: "ஒருவேளை தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை முடிக்க இருபது ஆண்டுகளானால் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது, குறுக்கிட்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து
ஃபாலி நாரிமன் கூறியதாவது: "மேல் முறையீட்டு வழக்கை விரைவில் முடிக்க ஜெயலலிதா தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். உடல் நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதால்தான், அவர் ஜாமீனில் தன்னை விடுதலை செய்யும்படி கோருகிறார். ஜாமீனில் விடுதலையாகும் காலத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டால், அவர் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயேகூட தங்கியிருப்பார். இதை உறுதிப்படுத்தும் உத்தரவாதத்தை அவரது சார்பில் நானே அளிக்கத் தயார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வழக்கு தொடர்புடைய 5,000 பக்க ஆவணங்களைப் படிக்கவும், மேல்முறையீட்டு மனுவைத் தயாரிக்கவும் குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது அவகாசம் தேவை. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதேபோல, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி கேட்டுக் கொண்டார்.
உத்தரவு: அனைவரது வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி தத்து பிறப்பித்த உத்தரவு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்ய வசதியாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம். இதன்மூலம் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. மேல்முறையீடு செய்யும் உரிமை மனுதாரர்களுக்கு இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.
ஜாமீனில் விடுதலை செய்யப்படும் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது போன்ற அசாதாரணமான உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு வன்முறைச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்று கட்சித் தொண்டர்களை மனுதாரர் (ஜெயலலிதா) கேட்டுக் கொள்ள வேண்டும்.
மனுதாரர்கள் நால்வரும் மேல்முறையீடு தொடர்புடைய ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கிறோம். அதற்கு மேல் ஒரு நாள் தாமதித்தாலும் இப்போது பிறப்பிக்கும் உத்தரவை நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும் அவை எப்போது விசாரிக்கப்படும் என்ற தேதியை அறிவித்து, அவற்றின் விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படும். இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி தத்து குறிப்பிட்டார்.
இன்று சென்னை திரும்ப வாய்ப்பு
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் விவரங்கள் அடங்கிய நகல், பெங்களூரில் உள்ள சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், ஜெயலலிதா உள்பட நால்வருக்கு தலா இரண்டு பேர் உத்தரவாதம் அளித்து, அந்த உத்தரவாதங்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு திருப்தி தரும் வகையில் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவை நிறைவேற்றும் பணிகளில் அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சனிக்கிழமை அந்த உத்தரவாதங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அளிக்கப்படும்பட்சத்தில், சனிக்கிழமை மாலையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே அவர் சென்னை திரும்பக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment