புனிதப் பயணம் ஏன் செய்ய வேண்டும்?
இறைவன் தன் திருமறை குர்ஆனில், “நிச்சயமாக, நாம் மனிதனை மிகவும் சிறப்பான அமைப்பில் படைத்தோம்” (95:4) “அவன்தான் (மனிதர்களாகிய) உங்களைப் பூமியில் தனது பிரதிநிதிகளாகப் படைத்தான்” (6:165) என மனிதனைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகிறான். இதற்குக் காரணம் அவன் உடலமைப்பை மட்டுமல்ல, வேறு எந்தப் படைப்பினத்திற்கும் இல்லாத பகுத்தறியும் ஆறாம் அறிவையும் தன் பரிசாகத் தந்திருக்கிறான்.
இந்த மனிதச் சிறப்பை உணரவும், இறைவனின் படைபாற்றலை அறியவும், மக்காவிலுள்ள இறையில்லத்திற்கு ஹஜ் எனும் புனிதப்பயணத்தை மேற்கொள்ளச் சொல்கிறான். அங்கே, உலகத்தின் பல்வேறு திக்குகளிலிருந்தும் கருப்பு, வெள்ளை எனப் பல்வேறு வண்ணங்களில், இனங்களில், மொழிகளில், உயரங்களில், உடலமைப்புகளில், பண்பாடுகளில், சாதாரணன், செல்வந்தன், எஜமானன், வேலைக்காரன் எனப் பல அந்தஸ்துகளில் உள்ளவர்கள் அனைவரும் வெள்ளுடையுடன் அணி அணியாக, இறைவனைப் பாடிப் புகழ்ந்தவாறு திரளுகிறார் கள். அந்த இறை இல்லத்தைச் சுற்றி வலம் வருகிறார்கள்.
ஆண்டியும் இங்கே, அரசனும் இங்கே, அறிஞனும் இங்கே, அசடனும் இங்கே, யாவரும் இங்கே, சமநிலை காணும் இடம் இதுதான்” என இறைவன் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தவே இப்பயணம்.
கணக்கைச் சமர்ப்பிக்கும் நாள்
மனிதன் இறந்தபின், மறுமை நாளில் இறைவன்முன் மீண்டும் எழுப்பப்படுவான். உலகில் அவனுக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளைப் பற்றிய கேள்விக் கணக்கைச் சமர்ப்பிக்கும் அந்த நாளை நினைவூட்டும் முன்மாதிரியான ஒரு காட்சியும் இதுதான்.
உலகிற்கு வரும்போது நீ கொண்டு வந்தது எதுவுமில்லை, கொண்டு போவதும் எதுவுமில்லை, எல்லாம் அவன் தந்தது, அடுத்தவனுக்குக் கொடுப்பதில் இன்னுமா தயக்கம்?
அடக்கி வாசி, அடங்கி வாழு என்று மதயானையை அடக்கும் அங்குசமாக மனிதனின் ஆணவத்தை அடக்கி அமைதிப் படுத்தும் காட்சியும் இதுதான்.
இறை நம்பிக்கையோடு, இறை அச்சத்தோடு, செய்த பாவங்களுக்காக உருகும் நெஞ்சத்தோடு, கண்ணீர் பெருகி, கன்னங்களில் வழிய, அந்த இறை ஆலயத்தைப் போர்த்தும் துணியைப் பிடித்துக் கதறி அழும்போது, அவன் பாவங்கள் எல்லாம் அங்கேயே உதிர்ந்து விழுந்து, அன்று பிறந்த பாலகனாகும் காட்சியும் இங்குதான்.
இப்ராஹீமைக் காப்பாற்றிய நெருப்பு
‘நானே இறைவன், என்னையே வணங்கு’ என்று சொன்ன நம்ரூத் அரசனுக்கு எதிராக, ‘இந்த மண்ணையும் விண்ணையும், உன்னையும் என்னையும், படைத்தவன் ஒருவனே. அவன்முன் அனைவரும் சமம்’ என்றார் இறைத்தூதர் இப்ராஹீம். அதற்காக நெருப்பிலே இடுவதற்கு அரசன் ஆணையிட்டான். அதைச் செயல்படுத்த முனைந்தபோது, ‘ஓ! நெருப்பே (என் அடியார்) இப்ராஹீமுக்கு நீ இதம்தரும் விதத்தில் குளிர்ந்து விடு’, (குர்ஆன் 21;69) என இறைவனே ஆணையிட, அப்படியே நெருப்பும் குளிர்ந்தது.
பின் பிறந்த மண்ணை விட்டே வெளியேறுகிறார். மக்கா எனும் மணற்பாலையில் கால் பதிக்கிறார். அங்கே இறை ஆணைப்படி, பாலைமணலில் தன் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், பச்சிளம் பாலகன் மகன் இஸ்மாயீலையும் சபா, மர்வா குன்றுகளுக்கிடையே விட்டுவிட்டுச் செல்கிறார். சுடும் வெயிலில் தண்ணீருக்காகக் குழந்தை அழுகிறது. ஹாஜிரா தன் குழந்தைக்காகத் ‘தண்ணீர், தண்ணீர்’ என அந்த குன்றுகளுக்கிடையே ஓடியலைகிறார்.
அழுகின்ற குழந்தை இஸ்மாயீலின் குதிக்கால்கள் பாலைமணலில் உரச, இறைவனின் ஈரம் அந்த இடத்தில் நீரூற்றாகப் பீறியடிக்கிறது. நீரூற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அதைப் பார்த்த ஹாஜிரா, ‘ஸம் ஸம்’ (ஓ நீரே! நீ பெருக்கெடுக்கும் வெள்ளமாகாமல்) என அமைதிப்படுத்துகிறார். தாகமும் தீர்ந்தது. இன்றும் தீராத இந்த ‘ஸம் ஸம்’ நீரூற்றுக் கிணறுதான் அங்கு வரும் லட்சக்கணக்கான புனித ஹஜ் பயணிகளின் தாகத்தைத் தணித்துக்கொண்டிருக்கிறது.
இறை இல்லம் கட்டப்பட்டது
இறை ஆணைப்படி நபி இப்ராஹீம், மக்களே வசிக்காத அந்தப் பொட்டல் பாலைவெளியில் கஃபா எனும் இறை இல்லத்தைக் கட்டுகிறார். ‘மக்கள் அனைவரையும் ஹஜ் பயணத்திற்கு அழைப்பாயாக’ என இறைவன் கட்டளையிட, ‘மக்களே இல்லாத இந்தப் பாலையில் யாரை நான் அழைப்பேன்?’ எனக் கேட்க, ‘அழைப்பது தான் உம் வேலை, அணியணியாய் மக்களைத் திரள வைப்பது என் வேலை’ என்று இறைவன் பதில் தருகிறான். அதன் எதிரொலிதான் இன்று உலக மக்கள் லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டமாகத் திரண்டெழும் காட்சி. இதுவே புனித ஹஜ் பயணத்தின் உதயமாகும்.
தொண்ணூறு வயதில் இப்ராஹீமுக்கு இஸ்மாயீல் எனும் மகன் பிறக்கிறார். அந்தக் குழந்தை வளர்ந்து வரும்போது, இறைவன் ‘அக்குழந்தையை எனக்காகப் பலியிடு’ என்றதும், இறைவனுக்காக எதையும் செய்யும் இப்ராஹீம் தன் மகனைப் பலியிடத் துணிகிறார். ‘ஓ, இப்ராஹீம் எனக்காக எதையும் செய்யும் உன் நம்பிக்கையில் நீர் வெற்றிப் பெற்றுவிட்டீர். நீர் உன் மகனுக்குப் பகரமாக ஓர் ஆட்டைப் பலியிடுவீராக’ என்று இறைவன் கட்டளையிட, அவ்வாறே செய்துமுடிக்கிறார். ஆகவே, நபி இப்ரஹீமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும், இதர வசதியுள்ளவர்களும் பிராணிகளைப் பலியிடுகிறார்கள்.
இவ்வாறு இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் இறை அர்ப்பணிப்பை எதிரொலிக்கும் விதமாகவும் இந்தப் புனித ஹஜ் பயணம் நடைபெறுகிறது.
ஆக மொத்தத்தில் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற பழமொழிகளை உயிர்ப்பிக்கும் விதத்தில் நடைபெறும் பயணமே இந்த ஹஜ்ஜுப் பயணம். அதை உலகமாந்தர் கொண்டாடும் நாளே, ஹஜ்ஜுப் பெருநாள் எனும் தியாகத் திருநாள்.
No comments:
Post a Comment