தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரைவில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன.
முதல்கட்டமாக கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக மத்திய அரசால் தேர்வுசெய்யப் பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் அரசு வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்வது வழக்கம், பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலை பட்டம் மற்றும் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வித் தகுதிகளை மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை மாவட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சென்னை, மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள் ளவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை தாண்டிவிட்டது.
 
வேலைக்கு வழிகாட்டும் மையம் ஆகிறது
அரசுப் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படும்போது, ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் பதிவுதாரர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பரிந்துரை செய்யும். அதிலிருந்து தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வுசெய்யப்படுவர்.
இந்த நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணியை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்பு திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நாடு முழுவதும் விரைவில் செயல்படுத்த உள்ளது. இதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைக்கான வழிகாட்டி மையங்களாக மாற்றப்படும்.
மாதிரி மையங்கள்
இந்த மையங்களில் பதிவுதாரர் களின் திறமை, ஆர்வம், மனோபாவம் ஆகியவை கண்டறியப்பட்டு அதற்கேற்ற படிப்பை படிக்கவோ, தொழில் பயிற்சியை பெறவோ உளவியல் ரீதியாக கல்வி ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்களைப் போன்று உளவியல் பரிசோதனை (சைக்கோமெட்ரிக் டெஸ்ட்) திறனாய்வு சோதனை (ஆப்டிடியூடு டெஸ்ட்) போன்ற பரிசோதனைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பயிற்சி பெற்ற வேலைவாய்ப்பு அதிகாரிகள், பதிவுதாரர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவார்கள். தேசிய வேலை வழிகாட்டி பணி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாதிரி மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
சிறப்புப் பயிற்சி முடித்து திரும்பிய அதிகாரிகள்
இதற்காக அந்த மாவட்டங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பு அதிகாரிகள் ஹைதராபாத்தில் முதல்கட்ட சிறப்பு பயிற்சியை முடித்துவந்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.