Friday, 10 October 2014

இடி தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வது எப்படி?- சில யோசனைகள்

முனைவர் எஸ். பால்ராஜ்.

முனைவர் எஸ். பால்ராஜ்.
 
மின்னல் மற்றும் இடி தாக்குதலில் இருந்து உயிர் மற்றும் உடமைகளை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் எஸ்.பால்ராஜ் விளக்கம் அளித்தார்.
 
மழைக் காலங்களில் மின்னல் பாய்ந்து உயிரிழப்போர் எண்ணி க்கை அதிகரித்து வருகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே திருநெல்வேலி, தூத்துக் குடி மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து கடந்த 10 நாட்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
 
வாசகியின் குரல்
இதுகுறித்து `தி இந்து’நாளிதழின் `உங்கள் குரல்’ பகுதியில் தனது வருத்தத்தை வாசகி ஒருவர் பதிவு செய்திருந்தார். மின்னல் தாக்குதலில் இருந்து உயிர்களையும் உடமைகளையும் தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்த தகவல்களை `தி இந்து’ நாளிதழில் வெளியிடுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக பல்வேறு தகவல்களை முனைவர் பால்ராஜ் பகிர்ந்து கொண்டார்.
ஒலியை விட, ஒளி அதிக வேகமாக பயணிக்கும். இதனால்தான் வானில் மின்னல் தோன்றிய பின் இடி முழக்கம் கேட்கிறது. மழைக் காலத்தில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது அதிக மின்னழுத்தம் உருவாகிறது.
இந்த மின்சாரம் நிலத்தை நோக்கி வரும் போது ஈர மரம், கம்பிகள் போன்ற மின்கடத்திகள் மூலம் பாய்கிறது.
 
வெட்டவெளியில்..
எனவே மழைக் காலத்தில் வெட்டவெளியில் மழையில் நனைந்தவாறு நிற்க கூடாது. ஏற்கெனவே மனித உடலில் பாதியளவு தண்ணீர்தான் உள்ளது. மின்சாரத்தை மனித உடல் எளிதில் கடத்தும். உடல் வழியாக மின்சாரம் நிலத்துக்கு பாயும்போது உடலில் உள்ள தண்ணீர் அனைத்தும் வெளியாகி, கரிக்கட்டை போல் உடல் மாறிவிடுகிறது.
 
மரங்களின் கீழ்..
மழைக்காலத்தில் மரங்கள் வழியாகவும் மின்சாரம் பாய்ந்து அதன் அடியில் நிற்பவர்களை பலி வாங்குகிறது. இதனால் மழைக்காலத்தில் ஈரமரங்களுக்கு அடியில் ஒதுங்கக் கூடாது. மழை யில் நனைந்து கொண்டே இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது.
செல்பேசியில் மின்னல், இடி முழக்கம் இருக்கும்போது செல்பேசியில் பேசக்கூடாது. மின்னலின்போது செல்பேசி மின்கடத்தியாக செயல்பட்டு மின்சாரத்தை கடத்தும். வீடுகளில் மின்சார ஒயர்கள் மின்கடத்தியாக செயல்படுவதால் `டிவி’ போன்ற மின் சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மழையின் போது பிரிட்ஜ், டிவி போன்றவற்றுக்கான மின் இணைப்பு, டிவி.க்கான கேபிள் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்க வேண்டும்.
தொலைபேசிக்கான லேண்ட் லைன் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். எனவே மழைக் காலத்தில் வீட்டிலும், வெளியிலும் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும்.
 
நவீன தொழில்நுட்பம்
சமீபத்திய தொழில்நுட்பத் தின்படி கட்டிடங்களில் இடிதாங்கி களை அமைத்தால், அதிலிருந்து மின்சாரத்தை கடத்தும் கம்பியை, தரையில் அதிக ஆழத்துக்கு பல்வேறு பிரிவுகளாக பிரித்து இரும்பு வலைமாதிரி புதைக்க வேண்டும்.
இதன்மூலம் மின்னலின் போது பாயும் மின்சாரத்தை, இடிதாங்கிகள் எளிதில் நிலத்துக்கு கடத்திவிடும். உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள், என்றார் அவர்.

No comments:

Post a Comment