Thursday 2 October 2014

திருவாரூர் அருகே செல்போன் டவரில் ஏறி அதிமுக தொண்டர் உண்ணாவிரதம்

 சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை உடனடியாக விடுதலைச் செய்யக் கோரி, திருவாரூர் அருகே புதன்கிழமை அதிமுக தொண்டர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

திருவாரூர் அருகேயுள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜமூர்த்தி (30). அதிமுக தொண்டரான இவர், புதன்கிழமை திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை மாங்குடியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் யாரோ ஒருவர் செல்போன் டவர் உச்சியிலிருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக திருவாரூர் தாலுகா காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து செல்போன் டவரில் இருந்த ராஜமூர்த்தியிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராஜமூர்த்தி கீழே இறங்கி வந்தார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னாள் முதல்வர் ஜெயலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து, ராஜமூர்த்தியை போலீஸார் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment