திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற தொடர் சுருக்கத்தின்போது வாக்காளர் பட்டியலில் 9,592 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் தெரிவித்தார்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில், 2016 பேரவைத் தேர்தலில் 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், 4 தொகுதிகளிலும் 9 லட்சத்து 70 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 9,592 வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 நாள்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு அட்டை வழங்கப்பட்டுவிடும்.
4 தொகுதிகளில் மொத்தமுள்ள 657 மையங்களில் 1,152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 100 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தள வசதி, நிழற்குடை, தொகுதிக்கு 4 வீதம் 16 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்து 70 ஆயிரத்து 413 வாக்காளர்களுக்கு மே 5-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள வாக்குச்சாவடியில் 52 பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 4 தொகுதிகளுக்கும் 1,325 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தவிர, தொகுதிவாரியாக 15 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியாற்றும் ராணுவம் மற்றும் மத்திய காவல் பிரிவில் பணியாற்றும் 782 பேருக்கு வாக்குச்சீட்டுகள் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தவும், 100 சதவீதம் வாக்களிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையதளம் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றார் வெங்கடேஷ்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உடனிருந்தார்
No comments:
Post a Comment