திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் திரு.வி.க. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் மையம்
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 1,152 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கடந்த 16-ந் தேதி நள்ளிரவு திருவாரூரை அடுத்த கிடாரங்கொண்டான் திரு.வி.க. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வெங்கடேஷ், தேர்தல் பார்வையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் அறைக்கு சீல் வைத்தனர். இந்த செயல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு வெளியே ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மைய பகுதியில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் இடத்தை சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் 14 சுற்றுகளில் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு கண்காணிப்பாளர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணப்படும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடேஷ் நேற்று ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் அறிக்கப்படும். இன்று மதியத்துக்குள் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment