Monday, 9 May 2016

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி


திருவாரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் வேலுடையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மத்திய தேர்தல் பார்வையாளர் (பொது) ஒனியட் பான்யாங் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியது: மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலரும், 3 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் 1200-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக வாக்குச்சாவடி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்கள்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 1378 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வேலுடையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 1582 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மஞ்சக்குடி ஸ்ரீ தயாநந்தா கலை அறிவியல் கல்லூரியிலும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள 1359 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மன்னார்குடி சண்முக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள 1267 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆக மொத்தம் 5586 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதியிலும் நடைபெற்று வரும் 2-ம் கட்ட பயிற்சி மையத்திலேயே 5586 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க ஏதுவாக அஞ்சல் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. முத்துமீனாட்சி, மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு(தேசிய நெடுஞ்சாலை) மணிமேகலை ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment