Sunday 22 May 2016

ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு: 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு; 3 பேர் பெண்கள்


முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்டது. முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சர்களின் பட்டியலையும் 
 ஜெயலலிதா அளித்தார். இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.
 இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களும் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.
 13 பேர் புதுமுகங்கள்: கடம்பூர் சி.ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, பி.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 13 புதுமுகங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு: 
 14-ஆவது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகிய 12 பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
 முன்னாள் அமைச்சர்கள்: கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேர் அமைச்சர்களாகவுள்ளனர்.
 3 பேர் பெண்கள்: வி.சரோஜா (ராசிபுரம்), எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகிய 3 பெண்கள் அமைச்சர்களாகவுள்ளனர். 14-ஆவது சட்டப் பேரவையில் அதிமுக அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 மேற்கும்-தெற்கும்: அதிமுகவின் வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளும், தென் மாவட்டத்தில் சில தொகுதிகளும் பெரிதும் கை கொடுத்தன. 
 இதனால், மேற்கு, தென் மாவட்டங்களில் இருந்து தலா 5 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பிற மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப் பேரவையின் அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை 12 மணிக்கு பதவியேற்பு
 முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
7 அமைச்சர்களுக்கு அதே துறைகள் ஒதுக்கீடு
 கடந்த பேரவையில் அமைச்சர்களாக இருந்த 7 பேருக்கு அவர்கள் வகித்த அதே துறைகளே புதிய 15-ஆவது சட்டப்பேரவையிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உணவு-இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு அதே துறைகள் இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி 
 கே.பழனிசாமிக்கு, அந்தத் துறையுடன் கூடுதலாக பொதுப்பணித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் கே.ராஜுவுக்கு, தொழிலாளர் நலத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment