Tuesday 17 May 2016

கொட்டிய மழையில் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்


திருவாரூரில் திங்கள்கிழமை கொட்டிய மழையில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர் வாக்காளர்கள்.
தமிழகத்தின் 15-வது பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 9,70,413 வாக்காளர்கள், 1,152 வாக்குச்சாவடிகளில் 1,325 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களித்தனர். பதற்றமான 52 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 325 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.
4 தொகுதிகளிலும் 114 நுண்பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக 384 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடு கின்றனர்.
வாக்குப்பதிவு:
திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடந்த பிறகு, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவில் தொடங்கிய மழை திங்கள்கிழமை காலையிலும் தொடர்ந்தது.
இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. காலை 7.30 மணியிலிருந்து தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டிருந்ததால் வாக்காளர் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்கி வீட்டுக்குள் முடங்கினர். ஆனாலும் மழையைப் பொருட்படுத்தாமல் பல வாக்காளர்கள் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
மதியம் 12 மணி வரை நீடித்த மழை அதன்பிறகு சற்று குறையத் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 5 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் 11 மணி நிலவரப்படி 16 சதவீதத்தை அடைந்தது. அதன்பிறகு லேசான மழை பெய்து கொண்டிருந்த தால் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற குடையுடன் வந்து வாக்களித்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 42 சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 62.73 வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவாரூர் தொகுதிக்குள்பட்ட புதூர் என்ற ஊர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால் அங்கு திட்டமிட்டபடி சரியான நேரமான காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. பிறகு தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பிறகு ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் சுமார் 15 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி பிறகு சரிசெய்யப்பட்டு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
கொரடாச்சேரி அருகே கமுகக்குடியில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மின்தடை ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்காளர்கள் மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் வாக்களித்தனர். தொகுதியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் அந்த இடங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அங்கு வாக்களிக்க ஏதுவாக தன்னார்வலர்கள் வழிகாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மீனாட்சி உதவி பெறும் பள்ளி முன்பு தேங்கிய மழைநீரில் நடந்து, குடை பிடித்தவாறு வரிசையில் நின்று வாக்களித்தனர்.
கொடிக்கால்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மழை, வெயிலுக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தும், பெண்கள் பந்தலுக்கு கீழே குடைபிடித்தவாறு வரிசையில் நின்றனர். புதுத்தெருவில் உள்ள நியூபாரத் பள்ளியில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து வாக்களித்தனர். தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கேட்டுகொண்டதையடுத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சிறுசிறு வணிகக் கடைகள் மூடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment