திருவாரூர் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் கல்லூரி மற்றும் அரசு ஐடிஐ தொடங்க வேண்டுமென மாவட்ட ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்க செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதி முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர வலியுறுத்தி அனைத்து சேவை சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுப்பது.
நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். செங்கம் திரையரங்கம் வழி மயிலாடுதுறை இணைப்புச் சாலையை இணைக்கும் சாலையை விரிவுபடுத்தி மாற்றுப்பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும். அரசு நடத்தும் ஒப்பந்த பணிகளில் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழித்து ஒதுக்கப்பட்ட முழு தொகையும் குறிப்பிட்ட பணிக்கு செலவு செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
திருவாரூர் நகரிலுள்ள மழைநீர், கழிவுநீர் வடிகால்கள் அனைத்தும் தரமானதாக அமைத்தும் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக செயல்படுவதை மாற்றி கழிவு நீர் தேங்காதவகையில் விரைந்து ஓட, நகரில் பயணிகள் ஆட்டோ இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தெற்குவீதி, மேலவீதி வழியாக மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள் தெற்கு வீதி துர்காலயா சாலை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் மற்றும் குடவாசலுக்கு நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும். மடப்புரம் மற்றும் மருதம்பட்டிணம் பாலங்கள் பேருந்துகள் சென்று வர மேம்படுத்த வேண்டும். திருவாரூர் தீ அணைப்பு நிலைய கட்டடம் புதிதாகவும் தரமானதாகவும் அமைக்க வேண்டும். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் போல் முழு வசதியுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் திருவாரூர் வழியாக இயக்கிடவும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணியினை விரைந்து முடித்திடவும் இப்பகுதி மக்கள் பகல் நேரத்தில் சென்னை செல்ல வசதியாகவும், தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்ல ஏதுவாகவும், சென்னை - திருச்செந்தூர் ரயில் திருவாரூர் வழியாக இயக்கிடவும், மயிலாடுதுறை - விழுப்புரம் ரயில்களை திருவாரூர் வரை நீட்டிக்கவும், இது போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து ரயில்வே துறையால் புறக்கணிக்கப்படுகின்ற திருவாரூர் பகுதி மக்களின் கோரிக்கைளை நிறைவேற்றித்தர வேண்டும்.
சங்கத் தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலர் பி. பாஸ்கரன், வர்த்தகர் சங்கத் தலைவர் சி. பாலமுருகன், பொது செயலர் சி. குமரேசன், வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் பாரத ஸ்டேட் வங்கி பாண்டுரங்கன், பி. அழகிரிசாமி, ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஐ. தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment