Thursday, 5 May 2016

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் 247 பேர் கைது












காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 146 பெண்கள் உள்பட 247 பேரை போலீசார் கைது செய்தனர். 

முற்றுகை போராட்டம்

காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் டெல்டா பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனத்துக்கு காவிரி டெல்டாவில் தடை விதிக்க வேண்டும். விளை நிலங்களில் குழாய் பதிக்கக் கூடாது. காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் விளமல் கல்பாலத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தடைகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதனை தொடர்ந்து நடந்த முற்றுகை போராட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமை தாங்கினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 146 பெண்கள் உள்ளிட்ட 247 பேரை போலீசார் கைது செய்தனர். 

No comments:

Post a Comment