Sunday, 15 May 2016

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் 23–ந்தேதிக்கு தள்ளிவைப்பு தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை


 பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை மே 23–ந்தேதிக்கு தள்ளிவைத்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
அரவக்குறிச்சி தொகுதி234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. அன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.
இந்த தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமியும், ம.தி.மு.க. சார்பில் கோ.கலையரசனும் போட்டியிடுகிறார்கள். பாரதீய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பிரபுவும், பா.ம.க. சார்பில் ம.பாஸ்கரனும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தொகுதியிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.
தேர்தல் கமிஷன் உத்தரவுஇந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியின் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாகவும், அந்த தொகுதிக்கு மட்டும் மே 23–ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் நேற்று இரவு திடீரென்று அறிவித்தது.
இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:–
பணம் பறிமுதல்அரவக்குறிச்சி தொகுதியில் பணமும், பரிசுப்பொருட்களும் வினியோகிக்கப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மாதம் 22–ந்தேதி அன்புநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 200 வேட்டி, சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷின்கள், பதிவு செய்யப்படாத ஆம்புலன்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் வீடு, கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது மகன் கே.சி.சி.சிவராமனின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளில் மொத்தம் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கே.சி.பழனிச்சாமியின் வீட்டில் இருந்து மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.95 லட்சம் ஆகும்.
தேர்தல் தள்ளிவைப்புஇந்த தொகுதியில் பணம் வினியோகிப்படுவதாக 33 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக 7 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எனவே அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் சட்டவிரோதமாக செயல்பட்டு வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப்பொருட்களும் கொடுப்பதாக தெரியவந்து உள்ளது. இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்குப்பதிவை நடத்துவதற்காக சூழ்நிலை இல்லாததால், அங்கு 16–ந்தேதி (நாளை) நடைபெறுவதாக இருந்த தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது.
23–ந்தேதி வாக்குப்பதிவுஅந்த தொகுதியில் 16–ந்தேதிக்கு பதிலாக வருகிற 23–ந்தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். அந்த தொகுதியின் வாக்குகள் 25–ந்தேதி (புதன்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment