Tuesday 6 December 2016

ஜெயலலிதாவுக்கு பிரியாவிடை தரும் தமிழகம்

 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
>>> முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் உடல் தங்கப்பேழையில் வைக்கப்பட்டு பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டது. தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மூலம் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.
ஜெயலலிதா உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டதும், முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சசிகலா, நடராஜன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் இறுதிச் சடங்குகளை செய்தனர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
>>> மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார்.
>>> மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
>>> மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
>>> மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
>>> ஜெயலலிதா உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
>>> ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமான், "ஜெயலலிதாவின் மறைவு தமிழகத்துக்கும், பாரத தேசத்துக்கும் பேரிழப்பு" என்றார்.
>>> ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் பிரதமர் தேவே கவுடா அஞ்சலி செலுத்தினார்.
>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். "ஜெயலலிதா துணிச்சலானவர். ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். அரசியலில் அவர் ஏற்படுத்திய வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது" என்றார்.
>>> ஜெயலலிதா உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அஞ்சலி செலுத்தினார். சந்திரபாபு நாயுடு பேசும்போது, "ஜெயலலிதாவின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாணியில் ஆந்திராவிலும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.

No comments:

Post a Comment