நிறைகிறது 2016. வழக்கம்போல இந்த ஆண்டில் தமிழகம் பேசியது, சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த தருணங்கள், தேசிய அளவில் அதிகம் கவனம் ஈர்த்த முகங்களைப் பட்டியலிடும் 'தி இந்து'வின் வருடாந்திரச் சிறப்புப் பக்கங்கள் இன்று தொடங்குகின்றன. 'தி இந்து' ஆசிரியர் குழு எப்போதுமே ஏதோ ஒரு முத்திரை இடுவதுபோல 'இவைதான் முக்கியமானவை அல்லது கவனிக்கப்பட்டவை' எனும் தொனியில் பட்டியலிடுவது இல்லை என்பதை நம்முடைய வாசகர்கள் நன்கறிவார்கள்.
இன்றைய 'தமிழகம் பேசியது 2016' பட்டியலில் இடம்பெறாத, அதேசமயம் இந்திய அளவில் பேசப்பட வேண்டிய தமிழக ஆளுமைகள், நிகழ்வுகளை நாம் அடுத்தடுத்த நாட்களில் வரும் பதிவுகளில் பார்க்கவிருக்கிறோம். இந்தப் பதிவுகள், பட்டியல்களையெல்லாம் தாண்டியும் முக்கியமான நிகழ்வுகள், விஷயங்கள், மனிதர்கள் நிச்சயம் இருக்கலாம். அப்படியான விஷயங்களையும் பொதுவெளியின் கவனத்துக்குக் கொண்டுவருவதில்தான் ஒரு ஊடகம் எதிர்கொள்ளும் உண்மையான சவால். வழக்கம்போல் அந்தச் சவாலுக்கு நாம் ஒவ்வொரு நாளும் உயிர்ப்போடு முகங்கொடுக்கிறோம்!
ஜெயலலிதா | ஒரு சகாப்தம்
தமிழகத்தின் மூன்று தசாப்த அரசியலைத் தன்னை மையமிட்டுச் சுழல வைத்திருந்த நான்கு முறை முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5 அன்று மறைந்தார். செப்.22 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், 75 நாட்கள் போராட்டத்துக்குப் பின் உயிரிழந்தார்.
தமிழக மக்களால் பெரிய அளவில் நேசிக்கப்பட்ட, முக்கியமாகப் பெண்களால் ஆராதிக்கப்பட்ட, அவருடைய கட்சியினரால் வழிபடப்பட்ட தலைவர். கள்ளச் சாராய ஒழிப்பு, தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தமிழகத்தின் பிரத்யேகமான 69% இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, சட்டரீதியாக அதைப் பாதுகாக்க எடுத்த சட்ட நடவடிக்கை, உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கான 50% ஒதுக்கீடு, மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து ஒலிக்கும் குரல்களில் ஒன்றாகத் தமிழகத்தைத் தக்கவைத்தது உள்ளிட்ட அவருடைய நடவடிக்கைகள் புரட்சிகரமானவை.
கட்சியையும் ஆட்சியையும் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட ஒற்றைக் குரல் எதிரொலிப்பு அமைப்பாக மாற்றியது, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு முதல்வராக ஆட்சியிலிருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை செல்லும் அளவுக்குத் தன்னைச் சுற்றி முறைகேடுகளுக்கு வழிவகுத்தது, மது விற்பனையை அரசின் கீழ் கொண்டுவந்து மது பெருக்கெடுத்து ஓட வித்திட்டது போன்ற அவருடைய நடவடிக்கைகள் மோசமானவை. ஒரு நபர் ராணுவம் என அதிமுகவை அவர் வழிநடத்தினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த ஒரு அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு அதிமுகவை இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் உயர்த்தினார். ஏற்கெனவே மக்களவையிலும் 37 உறுப்பினர்களுடன் இருக்கிறது அதிமுக. அதிமுக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வலுவான இடத்தில் அதை அமரவைத்துவிட்டு, 'அடுத்து என்ன?' எனும் கேள்விச் சுழலுக்குள் கட்சியோடு சேர்த்து, தமிழக மக்களையும் தள்ளிவிட்டு விடைபெற்றுக்கொண்டார் ஜெயலலிதா!
ஓட்டுக்கு நோட்டு | ஒரு அவமானம்
தேர்தல் சமயத்தில், திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல்செய்தார்கள். நள்ளிரவு நேரம், சுங்கச்சாவடியைத் தவிர்த்துவிட்டு, மாற்றுப் பாதையில் சென்ற அந்த லாரிகள், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறிச் சென்றவை. விரட்டிப் பிடித்தார்கள் அதிகாரிகள். தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்க ஆளுங்கட்சியினர் மூலம் கொண்டுசெல்லப்பட்ட பணம் இது என்று குற்றஞ்சாட்டினர் எதிர்க்கட்சியினர். ஆனால், இது வங்கிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்று பின்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு. தொடர் நிகழ்வாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது ஒரு பெரும் சர்ச்சையாகி, நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரு தொகுதிகளிலும் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. தமிழகம் தலைகுனிந்து நின்றது!
மக்கள் நலக் கூட்டணி | ஒரு ஏமாற்றம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்த, 'மக்கள் நலக் கூட்டணி' உருவானது. 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்று எனும் குரலோடு உருவான இந்தக் கூட்டணி, பரவலான கவனத்தையும் புதிய நம்பிக்கைகளையும் உருவாக்கியது. தேர்தல் நெருங்கிய சூழலில், தேமுதிக, தமாகாவோடு கை கோத்து, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது, நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அடிவாங்கியது.
தேர்தலில் மோசமான தோல்வியை அடைந்தது மநகூ. இடதுசாரிகள் இடம்பெறாத முதல் சட்டசபை எனும் நிலை ஏற்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பின் விஜயகாந்தும், வாசனும் மநகூவுடன் உறவை முறித்துக்கொள்ள, கடைசியில் கூட்டணியின் அமைப்பாளரான வைகோவும் வெளியேற... மாற்று கோஷம் எழுப்பியவர்கள் முகத்தில் கரியைத் தடவிவிட்டு, தள்ளாடிக்கொண்டிருக்கிறது மநகூ.
ஜல்லிக்கட்டு | ஒரு தடை
2014-ல் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்குப் பிறகு, இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அரசு கொண்டுவந்த அவசர ஆணைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது 'பெடா' அமைப்பு. இதையடுத்து, அந்த ஆணைக்கும் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தில் பின் சர்வதேச அரசியலும், சூழ்ச்சியும் இருப்பதாகப் பேசப்பட்டது. நாட்டு மாட்டினங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்கள் என்றது விவசாயிகள், சூழலியலாளர்கள் தரப்பு. தமிழ்ப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றது தமிழ் இன உணர்வாளர் தரப்பு. தமிழக அரசால் வேடிக்கை பார்ப்பதன்றி ஒன்றும் செய்ய முடியவில்லை.
தமிழக விவசாயிகள் | ஒரு தொடர் வதை
பருவ மழை பொய்த்ததால், தமிழக விவசாயிகள் கண்ணீர் விட்ட ஆண்டு இது. காவிரியில் தமிழக உரிமையை மறுதலித்தது கர்நாடக அரசு. தமிழக அரசால் அரசியல்ரீதியாகத் தீர்வுகாண முடியாத நிலையில், நீதிமன்றம் மூலமாகவே பிரச்சினையை அணுகியது. பெங்களூருவில் கலவரம் வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். கேபிஎன் நிறுவனத்துக்குச் சொந்தமான 42 பேருந்துகள் எரிக்கப்பட்டன. தமிழகத்துக்குத் தண்ணீர் தர உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தையும் நான்கு வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. முதலில் இதற்குச் சம்மதித்த மத்திய அரசு, பிறகு அந்தர்பல்டி அடித்தது. தொடர்ந்து நீதிமன்றப் படியேறிக் காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகள்.
தமிழகத்தின் விளைநிலங்களின் வழி குழாய் பதிக்கும் 'கெயில்' நிறுவனத் திட்டத்துக்கு எதிரான வழக்கிலும் தமிழக விவசாயிகளால் வெற்றி பெற முடியவில்லை. இயற்கை ஒருபுறம், அரசியல் ஒருபுறம் என வதைக்க அதிர்ச்சியும் மனவேதனையும் தாங்காமல் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். பயிர்கள் கருகியதைப் பார்த்து மனமுடைந்து மாரடைப்பால் காலமான விவசாயிகளின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டியது. தமிழக விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்த ஆண்டு இது!
ராம்குமார் | ஒரு மர்மம்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பட்டப் பகலில் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார் இளம்பெண் சுவாதி. நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், தமிழகக் காவல் துறையினரைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. விரைவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமாரைக் கைதுசெய்து, குற்றவாளி என்று மக்கள் முன் நிறுத்தினர் காவல் துறையினர். சுவாதி, ராம்குமார் இருவர் தொடர்பிலும் தனித்தனியே பல கதைகள் பரப்பப்பட்ட நிலையில், திடீரென ராம்குமார் இறந்தார். சிறையில் மின் கம்பியை இழுத்து, தன் பற்களால் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். ஒரு கொலை வழக்கு ஏராளமான மர்ம முடிச்சுகளோடு முடிந்தது.
வழக்கறிஞர்கள் போராட்டம் | ஒரு முற்றுகை
சென்னை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)-ல் பல்வேறு புதிய திருத்தங்களை அறிவித்ததுப் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்படி, நீதிபதிகளை முற்றுகையிடுவது, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்துவது, நீதிமன்ற அறைக்குள் முழக்க அட்டைகளைப் பிடிப்பது, நீதிபதிகளை முறைத்துப் பார்ப்பது, குரல் உயர்த்திப் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது குற்றம். சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களைச் சம்பந்தப்பட்ட நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை விதிக்கலாம்.
இந்தப் புதிய விதிமுறைகளைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தில் குதித்தனர் வழக்கறிஞர்கள். "ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர் பேரணி நடைபெற்றதே இந்த விதிமுறைகளுக்குக் காரணம்" என்று குற்றஞ்சாட்டிய வழக்கறிஞர்கள், இது மோசமான ஒடுக்குமுறைக்கு வித்திடும் என்றார்கள். தொடர் போராட்டத்தின் விளைவாக, இந்த சட்டத் திருத்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அமைதி திரும்பியது.
மதுவிலக்கு | ஒரு போராட்டம்
காந்தியர் சசிபெருமாள் கடந்த ஆண்டு தன்னுடைய தியாகத்தின் வழி ஏற்றிவைத்த மதுவிலக்குப் போராட்ட நெருப்பு தமிழகத்தைச் சூழ்ந்தது. எல்லாக் கட்சிகளும் இந்த முறை தேர்தலில் மதுவிலக்கை முன்மொழியும் சூழல் உருவானது. மதுவுக்கு எதிரான போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கிய ஜெயலலிதாவே, ஒருகட்டத்தில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்தார். மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 500 மதுக் கடைகளை முதல் கட்டமாக மூடினார். படிப்படியான முழு அடைப்புக்கு மக்கள் குழுக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றன.
பியூஸ் மானுஷ் | ஒரு போராளி
தனி ஒருவரின் விடுதலைக்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி தமிழகமே கொந்தளித்தது. சமூக வலைதளங்களிலும் ஆதரவுக் குரல்கள் அலறின. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவரான பியூஸ் மானுஷ், 2010-ல் சில சூழலியல் நண்பர்களுடன் கரம்கோத்து 'சேலம் சிட்டிசன் ஃபோரம்' இயக்கத்தைத் தொடங்கியவர். கஞ்சமலை சட்ட விரோத சுரங்கத் தொழிலை எதிர்த்தவர். நீர்ப் பிடிப்புப் பகுதியான கவுத்திமலை, கல்வராயன் மலையைத் தகர்த்து, இரும்பை எடுக்க முயன்ற பெருநிறுவனத்தை விரட்டியவர். கூட்டுறவுக் காடுகள் திட்டத்தைத் தொடங்கி, அங்கு 100 ஏக்கரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, ஒரு தனிக் காட்டையே உருவாக்கியவர்.
விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான விசாரணையில் மெத்தனம் காட்டிய சேலம் காவல் துறையினரைக் கண்டித்துத் தொடர்ந்து போராடியவர். நேரம் பார்த்து பியூஸ் மானுஷைக் கைதுசெய்தனர் காவலர்கள். மக்கள் ஆதரவோடு எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளிவந்தார் மானுஷ்.
மாரியப்பன் | ஒரு தங்கத் தருணம்
உயரம் தாண்டுதலில் மாற்றுத்திறனாளிகளின் உலக சாம்பியனான அமெரிக்க வீரர் சாம் கிரீவ்வை பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தோற்கடித்து, உலக சாதனையை நிகழ்த்தினார் மாரியப்பன். ஐந்தாவது வயதில் ஒரு விபத்தின் விளைவாக மாற்றுத்திறனாளியான மாரியப்பன், சேலம் பெரியவடகன்பட்டியைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து மிகுந்த போராட்டங்களினூடே வந்தவர். தன்னுடைய தன்னம்பிக்கையின் விளை வாக அவர் வென்ற தங்கம், நாட்டின் மக்கள்தொகையில் 2.13% அளவுக்கு விரிந்திருக்கும் கோடிக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்குள்ளும் நம்பிக்கை, பெருமிதச் சிறகுகளை விரித்தது!
ஆணவக் கொலைகள் | ஒரு சமூகக் குற்றம்
சமூகநீதி காக்கும் மாநிலம், பெரியார் மண் என்றெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டாலும், தமிழகத்தின் உள்ளே நாளுக்கு நாள் வெறித்தன மாக வளர்ந்துகொண்டிருக்கிறது சாதியம். அடக்குமுறை களின் உச்சம் சாதி ஆணவக் கொலைகள். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், அவருடைய காதல் மனைவி கௌசல்யா இருவரும் கடைவீதியில், பகலில் பலர் பார்க்க ஆதிக்கச் சாதியினரால் வெட்டப்பட்டதையும் சங்கர் கொல்லப்பட்டதையும் கேமரா பதிவின் வழி பார்த்த தமிழகம் உறைந்தது. 2016-ல் மட்டும் 40-க்கும் மேல் ஆணவக் கொலைகள் தமிழகத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். சாதி ஒழிப்பு முழக்கத்துக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது!
தமிழ்நாடு 60 | ஒரு வரலாற்று மறதி
தொல்காப்பிய காலத்திலேயே, 'தமிழ்கூறு நல்லுலகம்...' என்றழைக்கப்பட்ட நம் மண் சேர, சோழ, பாண்டியர் காலமானாலும் சரி, அதற்கும் முந்தைய காலமானாலும் சரி; ஒரு எல்லைக்குட்பட்ட இந்நிலத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அத்தனை பேரையும் உள்ளடக்கிய ஒரே பிராந்தியமாக இருந்ததில்லை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நிர்வாக வசதிக்காக மதராஸ் மாகாணமாக இருந்தபோதும்கூட, இன்றைய ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தின் பல பகுதிகளை உள்ளடக்கியதாகவே அது இருந்தது. பின்னாளில் அண்ணாவால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நம் நிலம் முன்னதாக 1956, நவம்பர் 1 அன்று நம் நிலம் தமிழ் மாநிலமானது பெருமிதத்துக்குரிய வரலாற்று நிகழ்வு. மொழிவாரி மாநிலம் உருவானதன் ஆண்டு விழாவை ஏனைய எல்லா மாநிலங்களும் கொண்டாடியபோது, எதிர்க்கட்சிகள் இதை நினைவூட்டியபோதும் தமிழக அரசு கொண்டாட மறுத்தது; தமிழ் மக்களும் மறந்தோம்!
தேவிபாரதி | ஒரு எழுச்சி
இந்த ஆண்டு தனது படைப்புகளின் மூலம் வாசிப்பனுபவத்துக்குப் புதிய பரிமாணம் சேர்த்தார் தேவிபாரதி. சமகால அபத்தங்களை அவல நகைச்சுவையுடன் வெளிப்படுத்திய 'நட்ராஜ் மகராஜ்' நாவல், அதன் உள்ளடக்கத்துக்காகவும் சொல்லப்பட்ட முறைக்காகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'கறுப்பு வெள்ளைக் கடவுள்' சிறுகதைத் தொகுப்பும் பரவலான கவனத்தை ஈர்த்தது. தேவிபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பான 'ஃபேர்வல் மகாத்மா' நூல் கிராஸ்வேர்ட் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றது. மோசமான சாலை விபத்தில் சிக்கி, மீண்டு வந்த தேவிபாரதி, தன்னுடைய எழுத்துகளால் காலத்தைத் திருப்பியடிக்க ஆரம்பித்த முக்கியமான ஆண்டு இது.
சுசீந்திரன் | ஒரு நம்பிக்கை
தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதிய அடக்குமுறையை வலியுடன் பேசிய 'மாவீரன் கிட்டு' படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார் சுசீந்திரன். முன்னதாக, கிரிக்கெட் தேர்வில் நிலவும் சாதியப் பாகுபாட்டைக் கடுமையாகச் சாடும் 'ஜீவா' படமே தமிழ்த் திரையுலகுக்கு ஆச்சரியமான வருகை. "ரஜினியின் 'கபாலி' தலித் அரசியல் பேசும் படமா?" எனும் விவாதம் இந்த ஆண்டில் பெரிய அளவில் பேசப்பட்டது என்றாலும், சாதிய அடக்குமுறைக்கு எதிராகத் தயக்கமின்றி வெளிப்படையாக உரக்கப் பேசுவதில் 'கபாலி'யைப் பின்னுக்குத் தள்ளினான் 'மாவீரன் கிட்டு'. பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கினான். வெகுஜன சினிமாவின் எல்லைக்குள் தொடர்ந்து வெவ்வேறு களங்களில் களமாடுவதன் மூலம் தமிழ்த் திரையின் எல்லைகளை விரிக்கிறார் சுசீந்திரன்.
வார்தா | ஒரு பேரிடர்
கடந்த ஆண்டு பெய்து கெடுத்த மழை, இந்த ஆண்டு பெய்யாமல் கெடுத்தது. கூடவே, அழையா விருந்தாளியாக வந்த 'வார்தா' புயல் தலைநகரைப் புரட்டிப்போட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின் சென்னை எதிர்கொண்ட பெரும் புயல் இது. சென்னையின் நுரையீரலாகத் திகழ்ந்த மரங்களில் ஒரு கணிசமான பகுதியைச் சூறையாடியது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்லாயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டது. புறநகரில் ஒரு வாரத்தைக் கடந்தும் மின், குடிநீர் விநியோகம் மீளாச் சூழல். பேரிடர்களை எதிர்கொள்ள நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று சுட்டிக்காட்டிச் சென்றது 'வார்தா' புயல்.
சசிகலா | ஒரு புதிய அதிகார மையம்
அதிமுகவின் 'நிரந்தரப் பொதுச்செயலாளர்' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா மறைவின் தொடர்ச்சியாக, அவருடைய அணுக்கத் தோழியான சசிகலாவின் கைக்கு வந்தது கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வத்தை அமர்த்தியவர், பொதுச்செயலாளர் பதவி தன்னை நோக்கி வருமாறு பார்த்துக்கொண்டார். மேல் மட்டத்தில் கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் கட்சியைத் தன் வசப்படுத்திவிட்ட அவர், அடுத்து ஆட்சியையும் வசப்படுத்துவார் என்கிறார்கள்.
No comments:
Post a Comment