Friday, 30 December 2016

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாண்டியராஜன், வேளாண்மை அறிவியல் மைய தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

சேகர்:- விவசாய பணிகளில் முழுமையாக போர்வெல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பூமிநாதன்:- நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பாரபட்சமாக கடன் வழங்கப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகளுக்கு உடன் கடன் வழங்கிட வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம்

சத்தியநாராயணன்:- நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவு குறைந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. விவசாயிகள் நலன் கருதி போதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

காவிரி ரெங்கநாதன்:- இந்த ஆண்டு வறட்சி ஏற்பட்டுள்ளதால் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். நெல்லுக்கு மாற்றாக உளுந்து, பயிர் சாகுபடி செய்ய வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

மணி:- மன்னார்குடி மூலங்குடி கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய ஆய்வு செய்ய வேண்டும். விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் 100 நாள் வேலை திட்டப்பணிகளை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

பயிர்க்கடன்

ராமமூர்த்தி:- மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வெளி மாநிலங்களுக்கு வைக்கோல் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்.

தம்புசாமி:- கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 850 என்கிற தமிழக அரசு அறிவிப்பு போதுமானதாக இல்லை. அம்மையப்பன்-திருக்கண்ணமங்கை சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால், பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி:- காவிரி நீர் கானல் நீராக மாறிவிட்டதால் இனி வருங்காலங்களில் இருக்கின்ற நிலத்தடி நீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் சாகுபடி முறைகள் குறித்து வேளாண்மை துறை உரிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சமுதாய போர்செட்டுகளை அமைத்திட வேண்டும்.

ஆக்கிரமிப்புகள்

சேதுராமன்:- ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம், நீர் நிலைகளை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும். கஞ்சி தொட்டிகளை திறக்கின்ற நிலைக்கு விவசாயிகள் செல்லாத வகையில் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

பாலகுமாரன்:- வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விலையில்லா உளுந்து, பயிறு வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு வழங்குவதுபோல் விலையில்லா மின் மோட்டார் வழங்க வேண்டும்.

மாசிலாமணி:- விவசாயிகள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். எலி தொல்லையை கட்டுப்படுத்திட வேண்டும்.

வடுகநாதன்:- ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும். குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும். இவ்வாறு விவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment