Tuesday 13 December 2016

வர்தா புயல் வலுவிழந்து தருமபுரி அருகே 40 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம்

வர்தா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான வர்தா புயலால், நேற்று மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக, பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் பிய்த்தெறியப்பட்டன. மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், வேன் போன்ற பல வாகனங்கள் மரங்கள் விழுந்ததால் நொறுங்கி சின்னாபின்மானது. மேலும் மரங்கள் கட்டடங்கள் மீது விழுந்ததில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.வீடுகளில் இருந்த நீர்த்தேக்க தொட்டிகள், பழைய கட்டடங்கள் பலவும் பலத்த காற்றால் இடிந்து விழுந்தது.
192 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள் அறுந்தும், மின்மாற்றிகள் முறிந்து விழுந்தன. கம்பங்கள் விழுந்ததில் கேபிள் டிவி ஒயர்களும் அறுந்து நகரின் பல பகுதிகளில் சாலைகள், கட்டடங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 192 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயல் நேற்று மாலை 6.30 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்து நிலப்பகுதியில் மேற்கு நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இவை தற்போது, தருமபுரி அருகே நகர்ந்து 40 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தருமபுரி, கிருஷணகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் தாழ்வு நிலையாக மாறி வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (செவ்வாய்) அனேக இடங்களில் மழை பெய்யும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழை எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment