Monday, 5 December 2016

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என்று அப்போலோ மருத்துவமனை

மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதை அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ய்ம்ஸ் மருத்துவக் குழு:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.
இதனையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய நோய் நிபுணர்கள், சுவாசயியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 3 மணியளாவில் எய்ம்ஸ் மருத்துவக் குழு சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மேலும் கூறும்போது, "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கில்நானி, நரங், தல்வார், மற்றும் மருத்துவர் த்ரிகா ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பர்.
தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடர்ந்து முதல்வர் உடல்நிலை தொடர்பான விவரங்களை கேட்டறிந்து வருகிறோம்.
ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
எக்மோ உதவியுடன் சிகிச்சை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது இதயம் சீராக செயல்படுவதற்கான கருவி (extracorporeal membrane heart assist device) பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
’சட்டம் ஒழுங்கில் பாதிப்பில்லை’
''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை'' என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கோரினால்..
தமிழக அரசு கோரினால் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை காக்க போதிய படைகள் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வரவேண்டும். அவ்வாறு வராதபட்சத்தில் மத்திய அரசு தானாக தலையிட முடியாது. தமிழக அரசு கோரினால் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக உள்ளது" என்றார்.
'முதல்வர் நலம்பெற காத்திருப்போம்'
''முதல்வர் சிக்கலான நிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராஜ்நாத் சிங் சென்னைக்கு வர இருப்பது, சட்டம்- ஒழுங்கை பாதுக்காக போலீஸார் செய்துள்ள முன்னேற்பாடுகள் ஆகியவை முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையை கரைத்துக் கொண்டிருக்கிறது.முதல்வர் நலம் பெற வேண்டும் என காத்திருப்போம்'' என்று விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். முழுமையான செய்திக்கு: | முதல்வர் நலம் பெறக் காத்திருப்போம்: திருமாவளவன் |
வெங்கய்யா சென்னை வருவதாக தகவல்:
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் வெங்கய்ய நாயுடு சென்னை வரவிருப்பதாகவும் அப்போலோ மருத்துவர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு:
தமிழகத்தை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் அம்மாநில போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதையடுத்து பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இதேபோல், சபரிமலை கோயிலில் சில இடங்களில் போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிரண் பேடி நம்பிக்கை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற தான் பிரார்த்தனை செய்வதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா மீது கோடிக்கணக்கான மக்கள் அன்பும், மரியாதையும் செலுத்தி வருவதாகக் கூறினார்.

No comments:

Post a Comment